Published:Updated:

`ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் காதல்!' - காதலிகளை சமாதானப்படுத்த இளைஞர் எடுத்த முடிவு

இளைஞர்
இளைஞர்

பிரச்னை சமரசமாக, கடந்த திங்கள் கிழமை அந்தக் காதலியைத் திருமணம் செய்வதற்காகக் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் பிரயாக்ராஜை அடுத்த கோண்டா மாவட்டத்தின் தராரியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்குத் தாலி கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். நீண்ட நாள்களாக இந்த விஷயத்தை அந்த இரண்டு பெண்களுக்கும் தெரியாமல் மறைத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு காதலியுடன் திருமணம் தொடர்பாகச் சண்டை ஏற்பட, அப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார் அந்த இளைஞர். இந்த விவகாரம் போலீஸ் வரை செல்ல தராரியா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் பிரச்னை சமரசமாக கடந்த திங்கள் கிழமை அந்தக் காதலியைத் திருமணம் செய்வதற்காகக் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இளைஞர்
இளைஞர்

இந்தச் சம்பவம் இன்னொரு காதலிக்கும் தெரிந்துவிட சரியான நேரத்தில் அந்தக் காதலியும் கோயிலுக்கு வந்து, தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து சண்டையிட்டுள்ளார். இந்தச் சண்டை சில நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கும் இடையேயான சண்டையாக மாறியிருக்கிறது. அந்த இளைஞரைக் கரம்பிடிப்பது யார் என்று இரண்டு பெண்களும் சண்டையிட்டுள்ளனர். இரண்டு பெண்களுமே அந்த இளைஞரை, தங்கள் இருவரில் இன்னொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அந்த இளைஞரும் எவ்வளவோ முயன்றும் இருவரும் சமாதானமாகவில்லை.

இதையடுத்துதான் இரண்டு பெண்களுக்கும் அந்த இளைஞர் தாலி கட்டியுள்ளார். ஒரே நேரத்தில் கோயில் முன்பாக வைத்து இருவருக்குமே அடுத்தடுத்து தாலி கட்டி மனைவிகளாக்கி சமாதானம் செய்துள்ளார். அவர் இரண்டு பெண்களுக்கும் தாலி கட்டும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது. தற்போது இந்தத் திருமணத்துக்கு மூன்று பேரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் படியேறி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு