Published:Updated:

`கண்ணை மூடினால், சர்ப்ரைஸ் தருவேன்!'- கற்பூர வியாபாரி கொலையில் சிக்கிய சென்னைப் பெண்

அடையாறிலிருந்து திருவொற்றியூருக்கு பைக்கில் வந்த அவர்கள் இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்துகிடந்தார். அவரின் அருகில் பைக் ஒன்று அநாதையாக நின்றுகொண்டிருந்தது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ஆனந்தகுமார், புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் வந்தனர். சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடுரோட்டில் கிடந்த சடலம்
நடுரோட்டில் கிடந்த சடலம்

இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், சேகர் (59), திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த கற்பூர வியாபாரி என்று தெரியவந்தது. எதற்காக சேகர் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சேகரின் மகளும் திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர். இதனால் சேகரின் வீட்டுக்கு அந்தப் பெண் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை என்ற முறையில் சேகருடன் பழகியுள்ளார்.

தற்போது அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அதனால் சேகருடன் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துள்ளார். இது, சேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சேகர், நீயும் நானும் பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சேகர்
கொலை செய்யப்பட்ட சேகர்

பின்னர், சேகர் உயிரோடு இருந்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து என்று கருதியுள்ளார். இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் சேகருக்குப் போன் செய்தவர், உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சேகரும் சம்மதித்துள்ளார். மாலை 6 மணியளவில் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இருவரும் அடையாறு வரை பைக்கில் சென்றுள்ளளனர். கற்பூரத்தை ஒவ்வொரு கடைகளிலும் சப்ளை செய்துவிட்டு இருவரும் இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.

`காலையில் கல்லூரி; மாலையில் திருட்டு!' - ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய சென்னை மாணவி

புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் இருவரும் நின்று பேசியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண், ``கண்ணை மூடிக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்'' என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட சேகரும் சந்தோஷத்துடன் கண்ணை மூடியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த ஃபெவிகுவிக் பசையை சேகரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இது என்ன என்று சேகர் யோசிப்பதற்குள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்துள்ளார்.

சேகரின் சடலத்தை தூக்கிச் செல்லும் போலீஸ்
சேகரின் சடலத்தை தூக்கிச் செல்லும் போலீஸ்

ஃபெவிகுவிக் சேகரின் வாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டதால் அவரால் சத்தம் போட முடியவில்லை. இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். ரத்தம் படிந்த சுடிதாரையும் மறைத்து வைத்தார். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சேகரைக் கொலை செய்தது அந்தப் பெண்தான் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரைக் கைது செய்து ரத்தக்கறை படிந்த சுடிதார் மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ``தோழியின் தந்தை சேகரிடம் நான் முதலில் நட்பாகத்தான் பழகினேன். ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் பாதைமாறிவிட்டது. அதனால்தான் இந்தநிலைமைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்" எனக் கூறியிருக்கிறார்.

புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம்
புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம்

நடுரோட்டில் கற்பூர வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.