Published:Updated:

டாஸ்மாக் திறந்த முதல் நாள்... கொலையில் முடிந்த குடிபோதைத் தகராறு! - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

கொலைசெய்யப்பட்ட ஐயப்பன்
கொலைசெய்யப்பட்ட ஐயப்பன்

கொரோனா இரண்டாவது அலை லாக்டெளனுக்குப் பிறகு, டாஸ்மாக் திறந்த முதல் நாளிலேயே குடிபோதையில் எற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (24). தினக்கூலி வேலை செய்துவந்த தொழிலாளி. அவருக்குக் குடிபழக்கமும், கஞ்சா போதைப் பழக்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், லாக்டெளன் முடிந்து டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறந்தன. இதையடுத்து ஐயப்பன் டாஸ்மாக் கடையில் மது வாங்கியிருக்கிறார். பின்னர் பறக்கை பகுதியிலுள்ள ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து சாகவாசமாக மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பறக்கை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின், சுரேஷ் ஆகியோர் மது போதையில் குளக்கரைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் போதையில் ஐயப்பனிடம் வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினும், சுரேஷும் கெட்டவார்த்தையால் ஐயப்பனைத் திட்டியதுடன், அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

டாஸ்மாக் திறந்த முதல்நாள் குடிமகன்கள் தகராறால் கொலை நடந்த இடம்
டாஸ்மாக் திறந்த முதல்நாள் குடிமகன்கள் தகராறால் கொலை நடந்த இடம்

இதையடுத்து ஐயப்பன் தனது நண்பரான சந்தோஷ் (24) என்பவரை அழைத்துச் சென்று ஸ்டாலின், சுரேஷ் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐயப்பனையும் சந்தோஷையும் சரமாரியாகக் குத்தியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சந்தோஷ் படுகாயங்களுடன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். கத்தியால் குத்திய ஸ்டாலினும் அவருடன் இருந்த சுரேஷும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சுசீந்திரம் போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கத்திக்குத்து காரணமாக இறந்த ஐயப்பனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை குறித்து போலீஸ் விசாரணை
கொலை குறித்து போலீஸ் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஐயப்பன், சந்தோஷ் இருவரையும் கத்தியால் குத்திய ஸ்டாலின் மீது ஏற்கெனவே கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், தற்போது அவர் கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவான ஸ்டாலின், சுரேஷ் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை லாக்டெளனுக்குப் பிறகு, டாஸ்மாக் திறந்த முதல் நாளிலேயே குடிபோதையில் எற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு