Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: மனைவிக்கு டார்ச்சர்; ஃபைனான்ஸியர் மீது புகார்! - கொடூரமாகக் கொல்லப்பட்ட கணவரின் அண்ணன்

கொலைசெய்யப்பட்ட அன்பு ரோஸ்
கொலைசெய்யப்பட்ட அன்பு ரோஸ் ( ம.அரவிந்த் )

அன்பு ரோஸின் மனைவி மற்றும் பிள்ளைகள் கண்முன்னே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள அழகியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ரோஸ் (45). பட்டுக்கோட்டையில் போட்டோ ஸ்டூடியோ நடத்திவந்தார். அழகியநாயகிபுரம் பஞ்சாயத்து 3-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவருடைய தம்பி சகாயராஜ் மல்லிப்பட்டினத்தில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்திவருகிறார். இவர் மனைவி பிரியா. அன்பு ரோஸும் சகாயராஜும் அருகருகேயுள்ள வீட்டில் தனித் தனியாக வசித்து வந்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட அன்பு ரோஸ்
கொலைசெய்யப்பட்ட அன்பு ரோஸ்

தில்லங்காட்டை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். பணம் வசூல் செய்வதற்காக சகாயராஜ் வீடு அமைந்துள்ள பகுதிக்கு லட்சுமணன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சகாயராஜின் மனைவி பிரியாவைப் பார்த்து பேசிவந்திருக்கிறார். அத்துடன் பிரியாவின் செல் நம்பரையும் கேட்டிருக்கிறார். பிரியா கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

எப்படியோ பிரியாவின் செல் நம்பரை தெரிந்து கொண்ட லட்சுமணன், அடிக்கடி போன் செய்து தகாத முறையில் பேசித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சகாயராஜுக்கும் லட்சுமணனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகாயராஜைத் தேடி லட்சுமணன் தலைமையில் ஆறு பேர் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு அவர் இல்லாததால் ஆத்திரமடைந்த லட்சுமணன், சகாயராஜின் அண்ணன் அன்பு ரோஸின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

அன்பு ரோஸின் மனைவி, பிள்ளைகள் கண்முன்னே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள லட்சுமணன் உள்ளிட்ட கொலைக் கும்பலைத் தேடிவருகின்றனர். இக்கொடூரக் கொலைக்கு போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்கள் கண்டனம் தெரிவிக்கும்விதமாக ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அன்புவின் உறவினர்கள் கொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை
கொலை

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்ததில், ``லட்சுமணன் ஃபைனான்ஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சகாயராஜ் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பிரியாவைப் பார்த்து பணம் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு பிரியா வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அப்போது உன் நம்பரை கொடு நான் போன் செய்றேன் என லட்சுமணன் கேட்டுள்ளார். என் நம்பர் உங்களுக்கு எதுக்கு என பிரியா தர மறுத்துள்ளார்.

இதையடுத்து பிரியா ஒரு கடையில் தனது நம்பரைச் சொல்லி ரீஜார்ஜ் செய்துள்ளார். அப்போது நோட்டில் எழுதி வைக்கப்பட்டிருந்த பிரியாவின் செல் நம்பரை லட்சுமணன் தன்னுடைய மொபைலில் சேவ் செய்துகொண்டிருக்கிறார். பின்னர் அடிக்கடி பிரியாவுக்கு லட்சுமணன் போன் செய்துள்ளார். ``எனக்கு ஏன் போன் செய்றீங்க... இனி போன் செய்யாதீங்க” எனத் தொடர்ந்து பிரியா கூறிய நிலையிலும் போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமடைந்த பிரியா தனது கணவர் சகாயராஜிடம் இதைத் தெரிவித்துள்ளார்.

செல்போன் பயன்பாடு
செல்போன் பயன்பாடு
Twitter

இதையடுத்து சகாயராஜ் தரப்பு தில்லங்காட்டுக்குச் சென்று லட்சுமணனிடம் எச்சரித்து பேசியுள்ளனர். பிறகு லட்சுமணன் தரப்பு சகாயராஜ் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ரோந்து போலீஸார் சண்டை நடப்பதைப் பார்த்துவிட்டு விசாரித்ததுடன், இது தொடர்பாக சகாயராஜை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கக் கூறியுள்ளனர். அதன்பேரில் சகாயராஜும் பிரியாவும் புகார் கொடுத்துள்ளனர். இதையறிந்த லட்சுமணன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வரும்போதே அவர்களைக் கொலை செய்வதற்காகத் துரத்தியுள்ளார். இதில் இருவரும் எப்படியோ தப்பித்து மறைந்துவிட்டனர்.

எப்படியும் வீட்டுக்குத்தானே வர வேண்டும் அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேர் சென்றுள்ளனர். வீட்டில் சகாயராஜ் இல்லாததால், அவருடைய அண்ணன் அன்பு ரோஸின் வீட்டுக்குச் சென்று பிரச்னை செய்துள்ளனர். ஏன் வாசலில் நின்று சத்தம் போடுறீங்க என அன்பு ரோஸ் கேட்ட பிறகு வீட்டுக்குள் சென்றவர்கள் அரிவாளால் வரை வெட்டிவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதில் அப்பாவியான அன்பு ரோஸ் அநியாயமாக உயிரிழந்தார். தலைமறைவாகிவிட்ட கொலைக் கும்பலை தேடி வருகிறோம்”எனத் தெரிவித்தனர்.

போட்டோகிராபர் அன்பு ரோஸ்
போட்டோகிராபர் அன்பு ரோஸ்

அப்பகுதியினர், ``லட்சுமணன் தரப்பு சகாயராஜைக் கொலை செய்யும் திட்டத்துடத்துடன்தான் வந்துள்ளனர். இருவரது வீடும் அருகருகே இருந்ததால் எந்த வீடு எனத் தெரியாமல் அன்பு ரோஸ் வீட்டுக்குள் சென்று சகாயராஜைக் கேட்டு பிரச்னை செய்ததுடன், கண்மூடித்தனமாக மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னே வெட்டி கொலை செய்துள்ளனர். பணம் இருக்கு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படியும் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற திமிரில் லட்சுமணன் ஒரு பாவமும் அறியாதை ஓர் உயிரைப் பறித்துள்ளார். நிர்கதியாக நிற்கும் அவர் குடும்பத்தை இனி யார் சுமப்பார்கள், அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கவே கவலையாக உள்ளது. இதில் குற்றவாளிகளை உடனே கைதுசெய்து தகுந்த தண்டனை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கையை போலீஸ் எடுக்க வேண்டும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு