Published:Updated:

அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த மர்ம நபர்கள்.. அலறிய மனைவி!- கும்பகோணத்தை உலுக்கிய கொலை

கொலை செய்யப்பட்ட ராமநாதன்
கொலை செய்யப்பட்ட ராமநாதன் ( ம.அரவிந்த் )

5 பேரும் சேர்ந்து ராமநாதனை கடுமையாக தாக்கியதுடன் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளனர்.அதற்கு அவர் மறுக்க, நீ கொடுக்க வில்லையென்றால் உனது மனைவியை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரியின் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க வருவது போல் வந்த 5 மர்ம நபர்கள் எண்ணெய் வியாபாரியின் மனைவியை அடைத்து வைத்து விட்டு அவரை இரும்புக் கம்பியால் குத்திக் கொன்றுள்ளனர். நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக இந்தக் கொலை நடந்ததா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராமநாதன்
கொலை செய்யப்பட்ட ராமநாதன்

கும்பகோணம் மேலகாவிரியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு வயது 63. பெரிய கடைத்தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா. இவர்களது ஒரே மகள் சரண்யா. இவருக்கு திருமணமாகி விட்டது. இவரது கணவர் கோவிந்தராஜன். சரண்யா ஒரே மகள் என்பதால் தனது கணவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் சரண்யாவும் அவரது கணவர் கோவிந்தராஜனும், நேற்று திருச்சி அருகே மணச்சநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இரவு வீட்டில் தனியாக இருந்த ராமநாதனும், அவருடைய மனைவி விஜயாவும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறி வீட்டுக்குள் சென்றுள்ளனர். உடனே விஜயா டி.வி சத்தத்தைக் குறைத்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவர்களிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி டி.வி சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் 3 பேர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ராமநாதன் யார் நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார்.

கடையடைப்புப் போராட்டம்
கடையடைப்புப் போராட்டம்

இதையடுத்து, 5 பேரும் சேர்ந்து ராமநாதனைக் கடுமையாகத் தாக்கியதுடன் வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்க, நீ கொடுக்க வில்லையென்றால் உனது மனைவியைக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதுடன் விஜயாவை மற்றொரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களிடம், அவளை எதுவும் செய்ய வேண்டாம் எனக் கெஞ்சியிருக்கிறார்.

பணம் கொடுத்தால் உனது மனைவியை விட்டு விடுவோம் என மர்ம நபர்கள் கூற உடனே வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்த ராமநாதன் மர்ம நபர்களிடம் கொடுத்து என்னையும் என் மனைவியையும் விட்டு விடுங்க எனக் கூறியுள்ளார். ஆனால் நகை, பணத்தை வாங்கிக்கொண்ட மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்புக் கம்பியால் ராமநாதன் கழுத்தில் குத்தியுள்ளனர். கணவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட விஜயா, `என்னங்க என்ன ஆச்சு' எனக் கதறியிருக்கிறார்.

விஜயா மற்றும் ராமநாதன்
விஜயா மற்றும் ராமநாதன்

இதில் ராமநாதன் வீட்டிற்குள்ளேயே உயிரிழந்து விட்டார். தனது கணவரின் சத்தம் இல்லாமல் போனதால் பதறிய விஜயா பெருங்குரலெடுத்து கத்தியிருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த ராமநாதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் அறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயாவை வெளியே வர வைத்தனர். வெளியே வந்த விஜயா தனது கணவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறினார் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் எஸ்.பி., மகேஸ்வரன், கும்பகோணம் டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீஸார் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். மோப்பநாய் கொலை நடந்த வீட்டில் இருந்து காந்தி பூங்கா வரை ஓடி நின்று விட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளன.

போராட்டம்
போராட்டம்

அவர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன் அருகில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று ராமநாதன் கொலையைக் கண்டித்து கும்பகோணம் நகர வர்த்தகர் கழகம், அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு சார்பில் இதில் தொடர்புடைய கொலையாளிகளை உடனடியாகப் பிடிக்க வேண்டும் எனக் கூறி 300 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு