Published:Updated:

தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் அருகில் பழிக்குப்பழியாக நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivakumar
Sivakumar

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவகுமார். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய சகோதரர் முத்துக்குமார், தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்ற ஆத்திப்பழம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Murder spot
Murder spot

இதுதொடர்பான வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சிவகுமார் இன்று காலை காரில் தூத்துக்குடிக்கு வந்தார். காரை, நீதிமன்றத்துக்கு அருகில் நிறுத்திவிட்டு ரோட்டில் நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக நடந்து சென்றபோது, அவ்வழியாக 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சிவகுமாரை திடீரென வழிமறித்து கத்தி மற்றும் வாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இக்கொலைச் சம்பவம் நடந்த ரோட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையமும், 200 மீட்டர் தொலைவுக்குள் நீதிமன்ற வளாகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன், டவுன் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகுமாரை கொலை செய்தது பச்சைபெருமாளின் தம்பி ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 8 பேர் என்பதும், பச்சைப்பெருமாளின் கொலைக்குப் பழி வாங்கும் சம்பவமாக நடந்ததும் தெரியவந்தது.

Police investigation
Police investigation

இந்தக் கொடூரக் கொலை குறித்து தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்த் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் அருகில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இக்கொலைச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக மூன்று கொலைகள் நடந்துள்ளன.