Published:Updated:

திருப்பூர்: `அதிகாலையில் பரிகார பூஜை; கொள்ளைக்காக மூதாட்டி கொலை!’ - அதிர்ச்சி சம்பவம்

சக்திவேல்
சக்திவேல்

குழந்தையின்மைக்கு பரிகார பூஜை செய்வதாகக் கூறி, மூதாட்டியைத் தாக்கிக் கொன்று, 5 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற ஆட்டோ டிரைவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள அகலராயபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்கள் அந்தப் பகுதியில் ஃபர்னிச்சர் கடை நடத்திவந்திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலையில் இவர்களது ஃபர்னிச்சர் கடையின் உள்ளிருந்து ஷட்டரைத் தட்டும் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஷட்டரை திறந்திருக்கிறார்கள்.

உள்ளே தலையில் பலத்த காயத்தோடு ரத்தம் வழிய ஆறுமுகம் உட்கார்ந்தபடி இருந்திருக்கிறார். அவரது மனைவி ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் வெள்ளகோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தைச் சிகிச்சைக்காகவும், ஈஸ்வரியின் உடலை உடற்கூறாய்வுக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை

அதன் பின்னர்தான் குழந்தையின்மைக்குப் பரிகாரம் செய்வதாக வந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவர், ஐந்து சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் பணத்துக்காக இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் நம்மிடம், ``திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள சின்னம்மநாயக்கனூரைச் சேர்ந்தவர் சக்திவேல். 2009-ம் ஆண்டு இரண்டு பேருடன் சேர்ந்து ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தநிலையில் இந்தக் கொலைச் சம்பவம் காரணமாக அவரது குடும்பத்தினரே அவரை ஒதுக்கிவிட்டனர். குடும்பம் ஒதுக்கிவிட்டதால், அங்கிருந்து கிளம்பி காங்கேயம் பகுதிக்கு வந்து லாரி ஓட்டுநராக வேலை செய்துவந்திருக்கிறார். அடுத்ததாக 2017-ம் ஆண்டு ஒரு கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

காங்கேயம் பகுதிக்கு வந்ததுமே வேறொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார். ஒன்றேகால் லட்சம் ரூபாய்க்கு ஹோண்டா சிட்டி காரும், புதிய ஆட்டோ ஒன்றையும் கடனில் வாங்கியிருக்கிறார். வருமானத்துக்கும் மீறி செலவு செய்யும் பழக்கம்கொண்டவர் என்பதால் பணத்தேவை அதிக அளவில் இருந்திருக்கிறது. ஆட்டோ டிரைவர் தொழில் மட்டுமன்றி, அவ்வப்போது பரிகார பூஜைகளும் செய்து வந்திருக்கிறார்.

ஈஸ்வரி
ஈஸ்வரி

இந்தநிலையில் ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதியினர், தங்கள் மகன் உதயகுமாருக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததற்குப் பரிகாரம் செய்யச் சொல்லி சக்திவேலிடம் கேட்டிருக்கின்றனர். காலை 5 மணிக்கு யாரிடமும் தெரிவிக்காமல் ஃபர்னிச்சர் கடைக்கு வரும்படியும், அங்குவைத்தே பரிகாரத்தை முடித்துக்கொள்ளலாம் என்றும் சக்திவேல் கூறியிருக்கிறார். அதன்படி டிசம்பர் 30-ம் தேதி காலையில் பரிகாரத்துக்காகச் சென்ற அந்தத் தம்பதியரைக் காலில் விழச் சொல்லியிருக்கிறார். அப்போது சுத்தியலால் இருவரையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு, ஈஸ்வரி கழுத்தில் இருந்த ஐந்து சரவன் நகையையும், 10,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியிருக்கிறார்” என்று விவரித்தார்.

கொலை நடந்த அன்றே காங்கேயம் டி.எஸ்.பி தனராசு தலைமையில் ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு சக்திவேலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ``தனது இரண்டாவது மனைவியை அழைத்துக்கொண்டுபோய் திருச்சியில் விட்டுவிட்டு, சக்திவேல் மதுரைக்குச் சென்றார். தகவலறிந்து சென்ற நாங்கள் வாடிப்பட்டியில் அவரைக் கைதுசெய்தோம்” என்கிறார் பார்த்திபன்.

- கி.ச.திலீபன்

அடுத்த கட்டுரைக்கு