Published:Updated:

தஞ்சை: `எனக்கு வேறு வழி தெரியலை' - வங்கி வாசலிலேயே தீக்குளித்த கணவர்... கதறிய மனைவி

வங்கி முன் தீக்குளித்த ஆனந்த்
வங்கி முன் தீக்குளித்த ஆனந்த் ( ம.அரவிந்த் )

மனமுடைந்த நிலையில் வங்கியைவிட்டு வெளியே வந்த ஆனந்த், வங்கி வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

தஞ்சாவூர் அருகே வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகையை கேட்டு தனியார் வங்கி ஒன்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்ததில், மனமுடைந்த ஒருவர் வங்கியின் முன்பே தீவைத்து எரித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக குடும்பத்தினர் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.

தீக்குளித்த ஆனந்த்
தீக்குளித்த ஆனந்த்

தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருடைய மனைவி ஹேமா. இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனந்த் வெல்டராக வேலை பார்த்துவருகிறார். ஆனந்த், வல்லம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் வங்கி ஒன்றில், 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்.

அதில், வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் திருப்பிச் செலுத்தியிருக்கிறார். ஆனால் வங்கித் தரப்பில், `மேலும் ரூ.6 லட்சம் கடன் தொகை நிலுவையில் உள்ளது. அதை உடனே திருப்பிச் செலுத்துங்கள்’ என ஆனந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து பதறிய அவர் வங்கிக்குச் சென்று மேனேஜர் மற்றும் பணியாளர்களிடம், `பணம் செலுத்துவதற்குக் கால அவகாசம் கொடுங்கள். உடனே கட்ட முடியாது. கொரோனா நேரத்தில் பிழைப்பே இல்லாமல் இருக்கிறேன்’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு வங்கித் தரப்பில், `முடியாது. உடனே கட்ட வேண்டும்’ என அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் வங்கியைவிட்டு வெளியே வந்த ஆனந்த், வங்கி வாசலிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். பட்டப்பகலில், அதுவும் வங்கி வாசலில் ஒருவர் தீவைத்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்து பதறியடித்து ஓடிவந்த ஆனந்த்தின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர், `இந்த முடிவை ஏன் எடுத்தீங்க..?’ எனக் கேட்டு கதறினர்.

ஆனந்தின் குழந்தைகள்
ஆனந்தின் குழந்தைகள்

``எனக்கு வேற வழி தெரியலை’’ என்று ஆனந்த் அந்த நிலையிலும் கூறியது கண்களைக் கலங்கவைத்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகின்றனர். ஆனந்த் குடும்பத்தினர் தரப்பில் பேசினோம். ``வங்கித் தரப்பில் தொடர்புகொண்டு, `கடன் பணத்தைச் செலுத்தவில்லையென்றால் வீடு ஏலம் விடப்படும்’ என்று கூறி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தனர். `கொரோனா நேரத்தில் வருமானமில்லாமல் தவிக்கிறோம். இப்போ போய் பணம் கட்டச் சொல்றாங்களே...’ எனப் புலம்பிகொண்டிருந்தார்.

வங்கி முன் தீக்குளித்தவர்
வங்கி முன் தீக்குளித்தவர்

அத்துடன் வங்கியில் போய் பேசிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். கொஞ்ச நேரத்தில் தீ வைத்துக்கொண்டதாகத் தகவல் வந்து எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்’’ என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு