Published:Updated:

பின்னணியில் பஞ்சாபிப் பாடல்; டிக்டாக்கில் பதிவிடப்பட்ட வீடியோ! - நண்பர்களால் சிக்கிய நபர்

மலையரசு

தான் வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிடவில்லை என்றும், தனது நண்பன் பதிவிட்டதால்தான் சிக்கிக்கொண்டதாகக் கூறியுள்ளார், ஜடேஜா.

jadeja
jadeja

குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரஜித்சிங் ஜடேஜா (33). எப்போதும் ரவுடியைப் போல உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்துகொண்டிருப்பது என அந்தப் பகுதியில் பிரபலமாகச் சுற்றிவந்துள்ளார். ஜடேஜாவுக்கு நிமேஷ் கோஹல் (28) என்ற நண்பர் இருந்துள்ளார். இதற்கிடையே, கடந்த இரண்டாம் தேதி, இருவரும் ஜடேஜாவின் சொந்த ஜீப்பில் கோத்தாரியா சாலையில் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜீப் நின்றுவிட, மீண்டும் அதை ஸ்டார்ட் செய்து பார்த்துள்ளனர்.

jeep
jeep

பலமுறை ஸ்டார்ட் செய்தும் ஜீப் ஸ்டார்ட் ஆகாததால், ஜடேஜா கடுப்பாகி, ஜீப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார். ஜடேஜா ஜீப்புக்கு தீ வைப்பதை அருகில் இருந்த அவரது நண்பர் நிமேஷ் கோஹல் வீடியோவாக எடுத்து, பஞ்சாபி பாடல் பின்னணியில் ஒலிக்க, டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களில் வீடியோ வைரலாக, அந்தப் பகுதி போலீஸாரின் கண்களில் வீடியோ தென்பட்டுள்ளது.

உடனே, நடந்த சம்பவம்குறித்து அந்தப் பகுதியில் விசாரித்த போலீஸார், ஜடேஜாவையும் நிமேஷ் கோஹலையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ``ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் தீ வைத்துக் கொளுத்தினேன்' என ஜடேஜா அசால்ட்டாகச் சொல்ல, போலீஸார் ஷாக் ஆகியுள்ளனர். இருப்பினும் தான் வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிடவில்லை என்றும், தனது நண்பன் பதிவிட்டதால்தான் சிக்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார் ஜடேஜா.

jadeja
jadeja

பின்னர், சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக இருவர் மீதும் வழக்குப் பதிந்த போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு காவல் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.