குற்றம்சாட்டப்பட்ட சந்திரேஷ் மார்ஸ்கோல், கடந்த 2008-ம் ஆண்டு போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, தனது காதலியைக் கொன்று அவரின் உடலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பச்மாரியில் வீசியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 25, 2008 அன்று கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில், ஆகஸ்ட் 20, 2008 அன்று டாக்டர் ஹேமந்த் வர்மா என்பவரின் சாட்சியத்தில், ``குற்றம்சாட்டப்பட்ட மார்ஸ்கோல் தனது காரை எடுத்துச் சென்றார், அப்போது ஏதோ தவறு நடந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு காவல்துறையிடம் கூறினேன். அதன் பிறகுதான் பச்மாரியில் மார்ஸ்கோலின் காதலியின் உடல் மூன்று நாள்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது" என்று கூறினார்.
இந்தச் சாட்சியத்தின் அடிப்படையில் . ஜூலை 31, 2009 அன்று விசாரணை நீதிமன்றம் சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரின் மேல் முறையீட்டு மனு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் சுனிதா யாதவ் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, ``குற்றம்சாட்டப்பட்டவரைப் பொய்யாகச் சிக்கவைக்கும் ஒரே நோக்கத்துடன் காவல்துறை இந்த வழக்கை விசாரித்திருப்பது தெரியவருகிறது.

இந்த வழக்கு ஒரு மோசமான சூழ்ச்சி. ஒருவேளை உண்மைக் குற்றவாளி டாக்டர் ஹேமந்த் வர்மாவாக இருந்து, அவரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் காவல்துறை இந்த வழக்கில் வேண்டுமென்றே மார்ஸ்கோலை சிக்கவைத்திருக்கலாம். இந்த வழக்கின் உண்மையை நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட மார்ஸ்கோல் ஒரு மருத்துவராக உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அவரின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, அவரது தண்டனையை ரத்துசெய்து, குற்றமே செய்யாமல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு அரசு இழப்பீடாக ரூ. 42,00,000 வழங்க வேண்டும். அதுவும் 90 நாள்களுக்குள் வழங்க வேண்டும். பணம் வழங்க தாமதமானால் ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியோடு வழங்க வேண்டிவரும்" எனத் தீர்ப்பளித்துள்ளது.