Published:Updated:

`ஒரு ஏக்கர் நிலம் போதும்!' - சொத்துத் தகராறில் மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

விவசாய நிலம்
விவசாய நிலம்

தன் பெயரில் உள்ள 15 ஏக்கர் நிலத்தை ஐந்து பேருக்கும் 3 ஏக்கர் என்ற விகிதத்தில் சமமாகப் பிரித்துக்கொடுக்க முடிவெடுத்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த முடிவு, மூத்த மகன் ஏழுமலைக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் உள்ள முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை. இவருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. சொத்தைப் பிரித்து கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக இவர்களின் குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் தன் பெயரில் உள்ள 15 ஏக்கர் நிலத்தை ஐந்து பேருக்கும் 3 ஏக்கர் என்ற விகிதத்தில் சமமாகப் பிரித்துக்கொடுக்க முடிவெடுத்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்த முடிவு, ஆரம்பத்திலிருந்தே நிலத்தில் உழைத்து வந்த மூத்த மகன் ஏழுமலைக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. `சகோதரிகளுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே கொடுக்க வேண்டும்' என ஏழுமலை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் அண்ணாமலைக்கும் ஏழுமலைக்கும் இடையே தொடர்ந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஏழுமலை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போது, `ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறேன். இதனால் உன்னை உயிரோடு விடுகிறேன். கோயிலுக்குப் போய்விட்டு வந்து வச்சுக்குறேன்' எனத் தந்தையை மிரட்டியுள்ளார்.

` கட்சிப் பணியோடு செம்மரம் கடத்தல்!' -சாந்தபிரியா கொலை வழக்கில் சிக்கிய வாணியம்பாடி தி.மு.க புள்ளி

இந்த நிலையில் சபரிமலைக்குச் சென்றுவிட்டுக் கடந்த சிலதினங்களுக்கு முன்பு வந்திருக்கிறார். நேற்று வயலுக்குச் சென்றபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த டிராக்டரால் அண்ணாமலையை விரட்டிக் கொலை செய்திருக்கிறார்.

ஏழுமலை
ஏழுமலை

இதனால், சம்பவ இடத்திலேயே அண்ணாமலை இறந்துவிட்டார். அங்கிருந்து தப்பித்த ஏழுமலை மதுராந்தகம் வழக்கறிஞர் ஒருவரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். பின்னர், வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார் ஏழுமலை.

அடுத்த கட்டுரைக்கு