Published:Updated:

தூத்துக்குடி: மதுபோதையில் ரகளை; கண்டித்த எஸ்.ஐ மீது லாரி ஏற்றிக் கொலை! - என்ன நடந்தது?

ஏரல் காவல் நிலையம் | எஸ்.ஐ பாலு
ஏரல் காவல் நிலையம் | எஸ்.ஐ பாலு

தூத்துக்குடியில் ஹோட்டலில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வரைக் கண்டித்த ஏரல் காவல் உதவி ஆய்வாளர் மீது மினி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பாலு. இவரும் இதே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பொன் சுப்பையாவும் நேற்று மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாழவள்ளானைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக்கான முருகவேல் என்பவர் மதுபோதையில் அப்பகுதியிலுள்ள ஹோட்டலில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். உதவி ஆய்வாளர் பாலு, முருகவேலைக் கண்டித்ததுடன், அவர் ஓட்டிவந்த மினிலாரியைப் பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு
உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு

அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த முருகவேல், மினிலாரியைக் கேட்டு தகராறு செய்துள்ளார். ``போதையில மினிலாரியை ஓட்ட வேண்டாம். காலையில ஸ்டேஷனுக்கு வந்து மினிலாரியை எடுத்துட்டுப் போ” எனச் சொல்லி முருகவேலை அனுப்பியிருக்கிறார் எஸ்.ஐ. பாலு. இந்நிலையில், இரவில் வாழவள்ளான் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் மதுபோதையில் முருகவேல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மீண்டும் உதவி ஆய்வாளர் பாலுவும், காவலர் பொன்சுப்பையாவும் முருகவேலைக் கடுமையாகத் திட்டி, வீட்டுக்குப் போகும்படி கூறி அங்கிருந்து விரட்டி அனுப்பினார்.

சென்னை: பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிய 10 ஆண்டு நட்பு! - ஒரிஜினல் போலீஸிடம் சிக்கிய போலி போலீஸ்

இதில், ஆத்திமடைந்த முருகவேல், தன் நண்பர் ஒருவரின் மினிலாரியை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். கொற்கை விலக்குப் பகுதியில் அதிவேகமாக வந்து இருவர் மீதும் மினிலாரியால் மோதி விட்டுத் தப்பியோடினார். பின்னால் அமர்ந்திருந்த பாலுவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த காவலர் பொன்சுப்பையாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

முருகவேல்
முருகவேல்

இவர், தற்போது ஏரல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழவள்ளான் ஊரில் விசாரித்தோம். ``முருகவேல் எப்பவும் குடிபோதையிலதான் இருப்பார். ஏதாவது சும்மா பேசினாலே, அதை வச்சு வம்பிழுப்பார். ஊருக்குள், `நான்தான் பெரிய ஆளு, என்ன விட்டா யாரும் இல்லங்’கிற மாதிரியே பேசிக்கிட்டு திரிவார். அதனால, அவர்கிட்ட யாரும் பெருசா பேசுறதில்ல. ஊருக்குள்ள மட்டுமில்லாம குடிச்சிட்டு தினமும் வீட்யுலயும் சண்டை போடுவார்.

இவன் தொல்லை தாங்க முடியாம மூணு நாளுக்கு முன்னால அவன் மனைவி பூச்சி மருந்து குடிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணுச்சு. இப்போ ஆஸ்பத்திரியில சிகிச்சையில இருக்காங்க அவங்க. போலீஸையே கொலை செய்யுற அளவுக்குப் போவான்னு தெரியலை” என்றனர். இந்நிலையில், முருகவேல், விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணக்குமார் முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

ஏரல் காவல் நிலையம்
ஏரல் காவல் நிலையம்

இதையடுத்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறைக்கு முருகவேல் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முறப்பநாடு அருகேயுள்ள மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது ரவுடி கும்பல் வீசிய வெடிகுண்டால் தலை சிதறி ஆழ்வார்திருநகரி காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். தூத்துக்குடியில் ரவுடிகளால் போலீஸார் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில், லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு