Published:Updated:

`வீல் சேரும் இல்லை; ஸ்ட்ரெச்சரும் இல்லை!' -பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளை சுமந்து சென்ற தந்தை

மகளை சுமந்து செல்லும் தந்தை
மகளை சுமந்து செல்லும் தந்தை

எக்ஸ்ரே கருவி பழுதானதால் அலிகாரில் உள்ள அரசு மருத்துமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். மீண்டும் தன் மகளை அவரே சுமந்து வந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 15 வயதுச் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காகத் தந்தை சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இளைஞர் அடித்துத் துன்புறுத்தியதில் சிறுமியின் கால் முறிந்துவிட்டது. சிறுமியைத் தாக்கிவிட்டு அந்த இளைஞர் தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் சிறுமியின் உறவினர்கள்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

இதுகுறித்துப் பேசியுள்ள சிறுமியின் உறவினர்கள், ``சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். நீதிபதி முன்னிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். மருத்துவ பரிசோதனைக்காகப் புதிதாகக் கட்டியுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை நடைமுறைக்காகப் பெண் காவலர் ஒருவரும் வந்திருந்தார்.

`ஸ்டார்ஹோட்டல்; பாலியல் வன்கொடுமை; எம்.எல்.ஏ மகன் வேடம்!' - பெங்களூர் போலீஸை அதிரவைத்த தமிழக இளைஞர்

அந்த மருத்துவமனை வளாகத்தில் பெண்களுக்கான மருத்துவப்பிரிவு உள்ளது. மருத்துவ பரிசோதனைகளை அங்கேதான் மேற்கொள்வார்கள். ஆனால், அங்கு செல்வதற்கு போதிய வசதிகள் இல்லை. மருத்துவமனையில் இருக்க வேண்டிய ஸ்ட்ரெச்சர், வீல் சேர் என எதுவும் இல்லை. கால்முறிவு ஏற்பட்டதால் அந்தச் சிறுமியால் நடக்க இயலவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திலும் எங்களுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரின் தந்தையே மகளை சுமந்து சென்றார்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

அங்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். எக்ஸ்ரே கருவி பழுதானதால் அலிகாரில் உள்ள அரசு மருத்துமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். மீண்டும் தன் மகளை அவரே சுமந்து வந்தார். மகளுக்கு நேர்ந்த துயரம் குறித்து மனவேதனையில் இருக்கிறோம். இந்நிலையில், மருத்துவமனையில் நடந்த சம்பவம் ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது” என்றனர்.

இதுகுறித்துப் பேசிய அரசு மருத்துவமனை மருத்துவர் அஜய் அகர்வால், ‘புதிதாகக் கட்டப்பட்ட மையத்தில் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அங்கித் யாதவ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு