Published:Updated:

நெல்லை: 6 திருமணம் முடித்த மோசடி `மாப்பிள்ளை’ - ஏழாவது பெண் பார்க்கும் படலத்தில் சிக்கியது எப்படி?

ஆறு திருமணம் செய்த வின்சென்ட் பாஸ்கர், அவர் கூட்டாளிகள்
News
ஆறு திருமணம் செய்த வின்சென்ட் பாஸ்கர், அவர் கூட்டாளிகள்

கடந்த ஏழு ஆண்டுகளில் ஆறு திருமணம் முடித்த வின்சென்ட் பாஸ்கர், ஏழாவதாகப் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அவரால் ஏமாற்றப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கல்யாண மன்னனை போலீஸார் கைதுசெய்தனர்.

நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரை கண்ணனிடம் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் ராஜ் என்பவர் புகார் அளித்தார். அதில், தன் மகள் விஜிலாராணியை திருமணம் செய்த திசையன்விளை சுவிசேஷபுரத்தை சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவர் பணம் நகையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

காவல்துறையின் பிடியில் மோசடி கல்யாண மன்னன்
காவல்துறையின் பிடியில் மோசடி கல்யாண மன்னன்

நெல்லை மாநகர மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவந்தது. வின்சென்ட் பாஸ்கரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் இருக்குமிடம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். திருமணத்தின்போது, வின்சென்ட் பாஸ்கரின் தாய் எனத் தெரிவித்த பிளாரன்ஸ், சித்தியான தாமரைச்செல்வி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போலீஸ் விசாரணையில், தாய், சித்தியாக இருவரும் போலியாக நடித்தது தெரியவந்தது. இந்தத் திருமணத்தின் புரோக்கராக செயல்பட்ட இன்பராஜ் என்பவர் தலைமறைவானார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கர் அந்தப் பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவர்மீது சந்தேகமடைந்த சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் பிடியில் வின்சென்ட் பாஸ்கர் சிக்கினார்.

காவல் நிலையத்தில் மோசடிக் கும்பல்
காவல் நிலையத்தில் மோசடிக் கும்பல்

அவரிடம் விசாரித்தபோது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்ததாகவும், பின்னர் அடுத்தடுத்து ஆறு பெண்களை திருமணம் செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். ஒவ்வொரு பெண்ணிடமுமிருந்து வரதட்சணையாகப் பணம், நகைகளை மூன்று மாதங்களில் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிடுவதை வழக்கமாகவைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆறாவதாகத் திருமணம் செய்த விஜிலாராணியிடம் 40 சவரன் நகை, மூன்று லட்சம் ரொக்கப் பணத்தை வரதட்சணையாகப் பெற்ற அவர், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வியாபாரத்துக்குத் தேவை என அவற்றை வாங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தலைமறைவான நிலையில், ஏழாவது திருமணம் செய்வதற்கு கயத்தாறு பகுதியில் பெண் தேடிக்கொண்டிருந்தபோது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.