Election bannerElection banner
Published:Updated:

இது இருந்தால்தானே அபராதம் விதிப்பீர்கள் - போலீஸ் எஸ்.ஐ.க்கு ஷாக் கொடுத்த கூலித்தொழிலாளி

இ-செல்லான் கருவியைப் பறித்துச் சென்ற செந்தில்குமார்.
இ-செல்லான் கருவியைப் பறித்துச் சென்ற செந்தில்குமார்.

வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-செல்லான் கருவியை போதை ஆசாமி பறித்துச் சென்றார்.

சென்னையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-செல்லான் கருவியை பறித்துச் சென்றவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

போலீஸ் தொப்பி
போலீஸ் தொப்பி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சந்திப்பில் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அந்தப் பைக்கை கனகராஜ் மடக்கினார்.

அப்போது அந்த நபர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவரின் பெயர் செந்தில்குமார் (42) என்று தெரியவந்தது. இந்தச் சமயத்தில் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வைத்திருந்த இ-செல்லான் கருவியை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றார். இதனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அதிர்ச்சிஅடைந்தார்.

ஹெல்மெட்
ஹெல்மெட்

உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செந்தில்குமாரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில்குமார் குடிபோதையில் இருந்தார். இதனால் செந்தில்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

போதை தெளிந்தப்பிறகு செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலம்பாக்கம், ரோஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த இ-செல்லான் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 பள்ளிக்கரணை காவல் நிலையம்
பள்ளிக்கரணை காவல் நிலையம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார் மீது ஹெல்மெட் அணியவில்லை என்று கருதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அபராதம் விதிக்க இ-செல்லானில் விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் செந்தில்குமார், குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது என இரண்டு குற்றத்துக்காக அபராதம் விதிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் இ-செல்லானில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்.

இதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். இது இருந்தால்தானே என் மீது அபராதம் விதிப்பீர்கள், இரண்டு வழக்குகள் போடுவீர்கள் என்று கூறியப்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்த இ-செல்லான் கருவியை பறித்தார். அடுத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் செந்தில் குமார் மீது மூன்று குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள்
பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள்

போதையில் இருந்த செந்தில்குமார், நான் யார் தெரியுமா, என்னை ஏன் இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு போலீஸாரை படாதபாடுபடுத்தியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தததை மருத்துவபரிசோதனை மூலம் போலீஸார் உறுதி செய்தனர். போதை தெளிந்தப்பிறகு செந்தில்குமார், சார் என்னை மன்னித்து விடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னையில் போலீஸாருக்கு தலைவலி ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. குறிப்பாக போக்குவரத்து பிரிவில் இருக்கும் போலீஸார் ஹெல்மெட் விவகாரத்தில் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது. அடையார் பகுதியில் சொகுசு காரை வழிமறித்த போக்குவரத்து போலீஸாரைக் கண்டித்து குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸைக் கண்டித்து சாலை மறியல்
போலீஸைக் கண்டித்து சாலை மறியல்

அதன்பிறகு போலீஸார் அவர்களை சமரசப்படுத்தினர். எனவே, வாகனச் சோதனையில் போலீஸாருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்து இ-செல்லானைப் பறித்த சம்பவம் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு