Published:Updated:

`போர் அடித்த ஊரடங்கு; சூட்கேஸில் கடத்தப்பட்ட நண்பன்! - மங்களூருவில் நடந்த பகீர் சம்பவம்

இளைஞர்
இளைஞர் ( Representational image )

ஊரடங்கு நேரத்தில் தன் நண்பனை சூட்கேஸில் அடைத்து தன் வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார் மங்களூருவைச் சேர்ந்த ஓர் இளைஞர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,240 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 331 - ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பு
அடுக்குமாடிக் குடியிருப்பு
Representational image

பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து போன்ற அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே வரும் மக்களுக்கு போலீஸார் நூதனத் தண்டனை விதித்து எச்சரித்து வருகின்றனர். இப்படி கடினமான சுழலில் தன் நண்பனைச் சந்திக்க ஆபத்தான செயலைச் செய்த மங்களூரு வாலிபர்கள் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று கொரோனா அச்சம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டு, வெளியாட்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாள்களாக வீட்டில் தனியாக இருந்து கடுப்பான அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ரமேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தன் நண்பனையும் வீட்டுக்கு அழைத்து வர நினைத்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஒரு பெரிய சூட்கேஸுடன் அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளார். ரமேஷைக் கவனித்த காவலாளிக்கு அப்போதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தும் எதுவும் கேட்காமல் விட்டுள்ளார்.

சூட்கேஸ்
சூட்கேஸ்
Representational image

பின்னர் இருசக்கர வாகனத்தில் அருகில் இருக்கும் தன் நண்பன் வீட்டுக்குச் சென்று அவனையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார் ரமேஷ். இருவரும் நீண்ட நேரம் வெளியில் சுற்றிவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பியுள்ளனர். அருகில் வந்ததும் யாரும் பார்க்காத இடத்தில் வண்டியை நிறுத்திய ரமேஷ் தான் கொண்டுவந்த சூட்கேஸில் நண்பனை ஒளிந்துகொள்ளும்படி கூறியுள்ளான் .

ரமேஷின் ஆலோசனைப் படியே நண்பனும் சூட்கேஸில் ஒளிந்துகொண்டுள்ளார். பிறகு, செக்யூரிட்டி இல்லாத நேரம் பார்த்து ரமேஷ் சூட்கேஸை இழுத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பனை வீட்டில் விட்டுவிட்டு, அவன் மட்டும் வந்து மிகச் சாதாரணமாக தன் வண்டியை எடுத்துச் சென்றுள்ளார். நள்ளிரவு நடந்த சம்பவங்கள் எதுவும் காவலாளிக்குத் தெரியவில்லை.

கர்நாடக போலீஸ்
கர்நாடக போலீஸ்

இதையடுத்து மறுநாள் காலை 8:30 மணிக்கு ரமேஷின் வீட்டு வாயிலில் இருவரும் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அடுக்குமாடிக்குடியிருப்பில் இருவரையும் பார்த்த காவலாளி அதிர்ந்துபோயுள்ளார். தொடர்ந்து அவர் உடனடியாக அடுக்குமாடிக்குடியிருப்பு நிர்வாகிகளிடம் புகார் அளிக்க அவர்கள் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போதுதான் மிகவும் ஆபத்தான முறையில் ரமேஷ் தன் நண்பனை அடுக்குமாடிக்குடியிருப்புக்குள் அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பில் மத்திய அரசு சொல்லும் `ஆக்ரா மாடல்' - ஹாட்ஸ்பாட் நகரம், மாடல் நகரமானது எப்படி?

பின்னர் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு இளைஞர் வீட்டுக்கும் போன் செய்து இருவரையும் அழைத்துக்கொண்டு காவல்நிலையம் வருமாறு போலீஸார் தெரிவித்துள்ளது. அங்குச் சென்றதும்தான் நடந்த விஷயங்கள் அனைத்தும் இரு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இறுதியாக இரண்டு இளைஞர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு ரமேஷ் மட்டும் தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு