Published:Updated:

மாஞ்சா நூலில் சிக்கி குழந்தை இறந்தது எப்படி? - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

சென்னை கொருக்குப்பேட்டையில் தந்தையுடன் பைக்கில் வந்த 3 வயதுக் குழந்தை, மாஞ்சா நூலால் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி
சிசிடிவி

சென்னை கொண்டித்தோப்பு கிருஷ்ணப்ப டேங்க் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரின் மகன் அபினவ் என்கிற அபினேஷ் சரவ் (3). குடும்பத்தோடு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினார் கோபால். அப்போது குழந்தையை மடியில் வைத்திருந்தார் கோபாலின் மனைவி சுமித்ரா. கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல், அபினேஷ் கழுத்தில் சிக்கியது. இதில் அவரின் கழுத்து அறுக்கப்பட்டு இறந்தார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவனைப் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

நாகராஜ்
நாகராஜ்

இந்தநிலையில், மீனாம்பாள் மேம்பாலத்தில் கோபால் குடும்பத்தோடு பைக்கில் வரும்போது மாஞ்சா நூல் அபினேஷ் கழுத்தில் சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் மேம்பாலத்தில் பைக்குகள், வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. கோபாலும் மேம்பாலத்தில் பைக்கில் வருகிறார். அப்போது, பறந்து வந்த மாஞ்சா நூல் மட்டும் அபினேஷ் கழுத்தில் சிக்குகிறது. பைக்கின் வேகம் காரணமாகக் குழந்தையின் கழுத்தை ஆழமாக மாஞ்சா நூல் அறுக்கிறது. குழந்தை கதறியதும் வாகனத்தை கோபால் நிறுத்துகிறார். பின்னால் அமர்ந்திருந்த அவரின் மனைவியும் கோபாலும் சேர்ந்து அபினேஷை கதறியபடி தூக்குகின்றனர். நடுரோட்டில் கோபால் பைக்கை நிறுத்தியதும் அவருக்குப் பின்னால் வந்த கார்கள், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்படுகின்றன என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

Vikatan

குழந்தை அபினேஷுக்கு மாஞ்சா நூல் மரணக் கயிறானதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து போலீஸ் இணை கமிஷனர் கபில் சராக்கர், துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு நடத்தினர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இணை கமிஷனர் கபில் சராக்கர் கூறுகையில், ``மாஞ்சா நூல் மூலம் கற்றாடி பறக்க விட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதற்காகக் கடைகளில் சோதனை நடந்துவருகிறது" என்றார்.

கற்றாடி
கற்றாடி

இதையடுத்து, கூடுதல் கமிஷனர் தினகரன் கூறுகையில், ``மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி 3 வயதுக் குழந்தை இறந்தச் சம்பவத்தில் 2 பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம். அவர்கள் மாஞ்சா நூல் பயன்படுத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. மாஞ்சா நூலை எங்கே வாங்கினார்கள் என்று விசாரணை நடந்துவருகிறது. குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான நூல் எங்கிருந்து பறந்து வந்தது என்றும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காற்றாடி அங்கு இல்லை. நூல் மட்டும்தான் சம்பவ இடத்தில் கிடந்தது. அதைப் பறிமுதல் செய்துள்ளோம். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாகத் தகவல் உள்ளது. ஆனால், அந்த நூலை பரிசோதித்தோம். அப்போது ஆன் லைனில் கிடைக்கும் நூலால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஸ்ட்ராங்கான நூலைத்தான் ஆன்லைனில் மாஞ்சா நூல் என்ற பெயரில் விற்கப்படுகிறது. அதனால் ஆன் லைனில் நூல்களை விற்பவர்களிடம் மாஞ்சா நூல் என்ற பெயரைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

3 வயதுக் குழந்தை
3 வயதுக் குழந்தை

மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கினால் அதை எடுக்கும்போது ரத்த நாளங்கள் அறுப்பட்டுவிடும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மாஞ்சா நூல் வஜ்ரம், கண்ணாடித் துகள்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வருங்காலத்தில் மாஞ்சா நூலால் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்"என்றார்.

வடசென்னையில் உள்ள கடைகளில் இன்று காலை முதல் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் சோதனை நடத்திய போலீஸாரிடம், ``அய்யா இது தண்ணீர் டிரம். வேண்டும் என்றால் அதையும் திறந்து பாருங்கள் என்று கடையை நடத்தும் பெண் ஒருவர் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனையில் காசிமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் காற்றாடிகளை விற்ற சார்லஸ் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடமிருந்து 20 காற்றாடிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..!'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல்