Published:Updated:

`4 பெயர்கள்... 3 மாநிலங்களில் மோஸ்ட் வான்டட்..!' - கோவையில் கைதான பெண் மாவோயிஸ்ட்டின் பின்னணி

மாவோயிஸ்ட் ஶ்ரீமதி
மாவோயிஸ்ட் ஶ்ரீமதி

கோவையில் கைதான பெண் மாவோயிஸ்ட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே பெண் மாவோயிஸ்ட் வருகிறார். இதுதான் க்யூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவல். உடனடியாக, ஆனைக்கட்டியில் உள்ள வனத்துறை செக்போஸ்ட்டுக்கு கேரளா மற்றும் தமிழக நக்சல் தடுப்புப் பிரிவினர் இருபதுக்கும் மேற்பட்டோர் 11-ம் தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காத்திருந்தனர்.

ஆனைக்கட்டி அரசுப் பேருந்து
ஆனைக்கட்டி அரசுப் பேருந்து

அப்போது ஆனைகட்டியிலிருந்து கோவைக்கு செல்லும் முதல் அரசு பேருந்து ( TN 33N 2972) காலை 5.30 மணிக்கு அந்த வழியே வந்தது.

செக்போஸ்ட் அருகே கோவை நோக்கி வந்த பேருந்தைத் தடுத்து நிறுத்திய நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார், பேருந்தின் இரண்டு பக்கங்களிலும் ஏறியுள்ளனர். அப்போது கர்நாடக செல்வதற்காக பேருந்தில் பயணித்த ஸ்ரீமதி என்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார்.

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி
மாவோயிஸ்ட் ஸ்ரீமதி

அவரது கைப்பையில் இருந்த புத்தகங்கள் அவர் மாவோயிஸ்ட் என்பதை உறுதிப்படுத்தின. அவரிடம் இருந்து செல்போன் மெமரி கார்டுகள் மற்றும் சில சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட ஶ்ரீமதி கர்நாடக மாநிலம் சிருங்கேரி பகுதியைச் சேர்ந்தவர். சி.பி.ஐ மாவோயிஸ்ட் பொறுப்பாளரான அவருக்கு, ஶ்ரீமதி, ஷோபனா, சவிதா, பாப்பு என்று மொத்தம் நான்கு பெயர்கள் உள்ளன.

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி
மாவோயிஸ்ட் ஸ்ரீமதி

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம், இந்திய ஆயுத சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீமதி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 1,00,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென கர்நாடகா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்துக்கு ஸ்ரீமதி அழைத்து வரப்பட்டார். மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகின்ற 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மாவோயிஸ்ட் ஸ்ரீமதி
மாவோயிஸ்ட் ஸ்ரீமதி

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் ஶ்ரீமதி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு