Published:Updated:

`கொரோனா வைரஸ் வருது... தள்ளி நில்!' - கிண்டலடித்த தொழிலாளிக்கு ஊட்டியில் நேர்ந்த கொடூரம்

ஊட்டி காவல்துறை
ஊட்டி காவல்துறை

இவர்கள் அனைவரும் நண்பர்கள். நாள்தோறும் இதே கடையில் கூடுவது வழக்கம். யாரும் எதிர்பாராத வகையில் கனநேரத்தில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும்விதமாக இன்று மாலை 6 முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

மற்ற பகுதிகளைப் போலவே நீலகிரியிலும் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவித்தவண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டி நகர் முழுக்க மக்களாலும் வாகனங்களாலும் நிரம்பி வழிகிறது.

ஊட்டி B.1 காவல் நிலையம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையின் முன்பு ஊட்டி மார்க்கெட்டில் பாரம் சுமக்கும் தொழிலாளியான ஜோதிமணி மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பகல் 12 மணியளவில் மீன் வறுவலை சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

கொலை நடந்த தேநீர் கடை
கொலை நடந்த தேநீர் கடை

அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வரும் தேவதாஸ் என்பவர் அந்தத் தேநீர் கடைக்கு வந்துள்ளார்.

மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜோதிமணி தேவதாஸைப் பார்த்து... `கொரோனா வைரஸ் வருது... தள்ளி நில்' எனக் கிண்டலாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த தேவதாஸ் தேநீர் கடையில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

ஜோதிமணி
ஜோதிமணி

இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விழுந்து உயிரிழுந்தார் ஜோதிமணி.

கண் முன்னே நொடிப்பொழுதில் நண்பன் கொலை செய்யப்பட்டதால் ஊட்டி மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஆவேசமடைந்து தேவதாஸைத் தாக்க முற்பட்டனர்.

கொலை செய்த தேவதாஸ்
கொலை செய்த தேவதாஸ்

காவல் நிலையம் அருகில் என்பதால் உடனடியாக வந்த காவல்துறையினர் ஜோதிமணி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவதாஸை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

`நான் யார் தெரியுமா?' -மிரட்டும் கரை வேட்டிகள்... திணறும் போலீஸ்; புதுச்சேரி கொரோனா அப்டேட்ஸ்

சம்பவத்தை நேரில் பார்த்த தொழிலாளர்கள் சிலர், ``மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜோதிமணிக்கு வெங்காயத்தை வெட்டிக் கொடுத்துவிட்டு கத்தியை மேஜை மீது வைத்தார். கொரோனா குறித்து தேவதாஸை ஜோதிமணி கிண்டலாகப் பேசவும் ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக் குத்திவிட்டார்" என்றனர்.

ஊட்டி பி.1 காவல் நிலையம்
ஊட்டி பி.1 காவல் நிலையம்

``இவர்கள் அனைவரும் நண்பர்கள். நாள்தோறும் இதே கடையில் கூடுவது வழக்கம். யாரும் எதிர்பாராத வகையில் கனநேரத்தில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. உரிமையாளர், பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், நேரில் பார்த்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என ஊட்டி B1 காவல்துறையினர் தெரிவித்தனர்.

சக தொழிலாளியைப் பட்டப்பகலில் கண் எதிரே கொலை செய்ததால் ஏராளமான தொழிலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு