Published:Updated:

உயிருடன் சூட்கேஸில் அடைப்பு.. வில்லாவில் படிந்த ரத்தக் கறை.. பட்டாயாவை உலுக்கிய மரணம்!

சூட்கேஸில் அடைக்கப்பட்ட உடல்
சூட்கேஸில் அடைக்கப்பட்ட உடல் ( daily mail )

விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவரின் பெயர் வாங் ஜுன் என்பதும், 30 வயதான இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.

மத்திய தாய்லாந்தின் கம்பேங் பேட்டில் பிங் ஆற்றில் மீனவர் சுதான் தாப்டன், என்பவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக பெரிய சூட்கேஸ் ஒன்று ஆற்றில் மிதந்துவந்துள்ளது. மீன்கள் அந்த சூட்கேஸை கடித்துக்கொண்டிருக்க அதைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால் கடினமாக இருந்துள்ளது. ஒருவழியாக அதை திறந்தபோது ஒரு ஆணின் உடல் அதில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ஆண் சடலம் இருந்த சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவரின் பெயர் வாங் ஜுன் என்பதும், 30 வயதான இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.

சூட்கேஸில் அடைக்கப்பட்ட உடல்
சூட்கேஸில் அடைக்கப்பட்ட உடல்
daily mail

சீனாவைச் சேர்ந்தவர் எப்படி தாய்லாந்து ஆற்றில் பிணமாக மிதந்தார் என்பது மர்மத்தை ஏற்படுத்த போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். ஆற்றின் அருகில் உள்ள கிராமத்தினரிடம் நடத்திய விசாரணையில் காரில் வந்த கும்பல் ஒன்று அருகிலுள்ள பாலத்திலிருந்து இரண்டு சூட்கேஸை தூக்கி எறிந்ததைக் கண்டதாகக் கூறினர். இந்தத் தகவல்களைச் சேகரித்த போலீஸார், காரின் ஓட்டுநரை தேடியது. இதற்கிடையில், முதற்கட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகின.

``வாங் ஜுன் மற்றும் அவரின் மனைவி 28 வயதான ஜு பிங் இருவரும் கடந்த 12-ம் தேதிக்குப் பிறகு பாங்காக்கிற்கு வந்து அங்கிருந்து பட்டயாவுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுடன் 13 சீன சுற்றுலாப் பயணிகளும் பட்டாயா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மூன்று வில்லாக்களை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

இவர்களில் மற்ற அனைவரும் சமீபத்தில் சீனா திரும்பிவிட வாங் ஜுன் மற்றும் அவரின் மனைவி மட்டும் சீனா திரும்பவில்லை" என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதி தங்கிய வில்லாவுக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு ரத்தக் கறை மற்றும் சண்டை போட்டதற்கான தடயங்கள் இருப்பதையும் போலீஸார் அறிந்துகொண்டனர்.

வாங் ஜுன் மற்றும் அவரின் மனைவி ஜு பிங்
வாங் ஜுன் மற்றும் அவரின் மனைவி ஜு பிங்
daily mail

இதற்கிடையே, தேடப்பட்டுவந்த டிரைவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை தகவல்களை தாய்லாந்து போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில், ``கார் நிறுவனம் மூலம் சீன சுற்றுலாப் பயணிகளின் ட்ரிப் எனக்கு கிடைத்தது. அப்போது வீட்டுக்கு வந்தபோது ட்ரிப்பை புக் செய்த நான்கு சீனர்கள் வீட்டில் இருந்தனர்.

நால்வரில் இருவர் மிக குண்டாக இருந்ததை நான் கவனித்தேன். சிறிது நேரத்தில் அவர்கள் ஐந்து சூட்கேஸ்களை காரில் ஏற்றத் தொடங்கினர். முதலில் தக் மாகாணத்துக்குச் செல்லும்படி கூறப்பட்டது. ஆனால், கம்பேங் பேட்டில் பிங் ஆற்றுப் பகுதிக்கு வந்தபோது காரை நிறுத்துமாறு கூறினார்கள் அவர்கள். பின்னர் சூட்கேஸ்களை இறக்கி ஆற்றில் எறிந்தார்கள்" எனக் கூறியுள்ளார் அந்த டிரைவர்.

இந்த வாக்குமூலத்தைச் சேகரித்த பின் பேசிய போலீஸ் அதிகாரி பொல்பொன்ப்ரூக்ஸா, ``கொலை செய்யப்பட்ட நபர் தன் மனைவியுடன் இங்கு வந்துள்ளார். ஆனால், அவரின் மனைவி தற்போது காணவில்லை. அவரையும் ஒரு சூட்கேஸில் அடைத்து வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். பிரேதப் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் நீரில் மூழ்கி இறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே, இருவரும் சூட்கேஸில் அடைக்கப்படும்போது உயிருடன் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் காணப்பட்ட ரத்தம் மற்றும் கைரேகைகள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து வருகிறோம்.

உயிருடன் சூட்கேஸில் அடைப்பு.. வில்லாவில் படிந்த ரத்தக் கறை.. பட்டாயாவை உலுக்கிய மரணம்!
daily mail

இவர்களின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது வாங் ஜுன் தாய்லாந்துக்கு அடிக்கடி பயணம் செய்தது தெரியவந்துள்ளது. தாய்லாந்து வந்தபின் பர்மா நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள தக் மாகாணத்துக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இறந்தவர் தொடர்பான முழுத் தகவல்களையும் சேகரித்துள்ளோம்.

அவரின் மனைவி உடலைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து 4 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் வாங் ஜுனின் மனைவியின் உடலைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு