Published:Updated:

மாதவரம்: `கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய மனைவி; பரிசோதனை முடிவுக்கு பயந்து விபரீத முடிவு!'

 தற்கொலை
தற்கொலை

கணவர் குடும்பத்தினரின் தொல்லை தாங்காமல்ஆறு மாத காலமாக கர்ப்பிணி எனக் கூறிவந்த இளம்பெண் பரிசோதனை முடிவில் கணவருக்கு உண்மை தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மாதவரத்தை அடுத்த மூலக்கடை, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் ரஞ்சித்தின் மனைவி பெயர் கனிமொழி (25). இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், ரஞ்சித்குமாரின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கனிமொழியைத் திட்டியுள்ளனர். இது தொடர்பாகக் கனிமொழி வீட்டாருக்கும், ரஞ்சித் வீட்டாருக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்றுவந்துள்ளது. இந்நிலையில், கனிமொழி தன் கணவர் ரஞ்சித்குமார், மாமியாரின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களைச் சமாளிப்பதற்காகத் தான் கர்ப்பமாக உள்ளதாகப் பொய் கூறியிருக்கிறார். திருமணமாகி இரண்டாண்டுகளாகக் குழந்தை இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருந்த கனிமொழியின் கணவரும், அவர் குடும்பத்தினரும் கனிமொழியை மகிழ்ச்சியில் கொண்டாடியுள்ளனர். கனிமொழி கர்ப்பமாக இருப்பதாக உற்றார் உறவினர்களிடம் கூறி மகிழ்ந்திருக்கின்றனர். இதற்கிடையில், மாதாந்தர மருத்துவப் பரிசோதனைக்கு கனிமொழி முறையாகச் சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினருடன் சென்றால் உண்மை தெரிந்துவிடும் என்பதால், தனியாகவே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். நாள்கள் இப்படியாக நகர்ந்திட, நேற்று முன்தினம் கனிமொழியின் கணவர் ரஞ்சித்குமார் அவரைக் கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் கனிமொழிக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துள்ளனர்.

 தற்கொலை
தற்கொலை

ஸ்கேன் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து பதற்றமாகவே இருந்துள்ளார் கனிமொழி. இந்தநிலையில், நேற்று ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கி வருவதற்காக ரஞ்சித்குமார், தன் மனைவி கனிமொழியை அழைத்திருக்கிறார். ஆனால், கனிமொழி தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகக் கூறிவிட்டு அவரை மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். ரஞ்சித்குமார் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் கனிமொழியுடன் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், மருத்துவ பரிசோதனை முடிவில் தான் கர்ப்பமாக இல்லை என்பது கணவருக்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சிய கனிமொழி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவமனைக்குப் பரிசோதனை அறிக்கை வாங்கச் சென்ற ரஞ்சித்குமார் அறிக்கையில் தன் மனைவி கர்ப்பமாக இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவமனையிலிருந்து கோபத்தில் உடனடியாக கனிமொழிக்கு போன் செய்திருக்கிறார். கனிமொழி அழைப்பை ஏற்காததால் கொதித்துப்போன ரஞ்சித் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். வீட்டின் படுக்கையறை கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் பதறிப்போன அவர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்திருக்கிறார். அங்கு, கனிமொழி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறி அழுதபடி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த மாதவரம் போலீஸார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கனிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கனிமொழிக்கு திருமணமாகி இரண்டு வருடங்களே ஆவதால் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ மரணம் தொடர்பாக விசாரித்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு