Published:Updated:

`தீபம் ஏற்றினால் கொரோனா சாகுமா?’ - பிரதமரை அவதூறாகப் பேசிய 5 பேர் மார்த்தாண்டத்தில் கைது

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

`விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றினால் கொரோனா சாகுமா’ என்று கூறி பிரதமரை ஆபாசமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காவும், கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளி, கை கழுவுதல் என பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், `நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் மக்களின் ஒற்றுமையை பறைசாற்ற இரவு ஒன்பது மணிக்கு, ஒன்பது நிமிடங்கள் வீட்டில் மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபம், மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும். அல்லது மொபைலில் உள்ள டார்ச் லைட்டுகளை ஒளிர விட வேண்டும்’ என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விளக்கு மற்றும் செல்போன் டார்ச் மூலம் ஒளிரச் செய்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடியை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர்
பிரதமர் மோடியை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர்

அதேநேரம் பிரதமரின் வேண்டுகோளை ஆதரித்தும், கிண்டலடித்தும் பல பதிவுகளை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். பலர் மீம்ஸ்களையும் உருவாக்கி இணையத்தில் உலவ விட்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரதமர் மோடியை ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரை மார்த்தாண்டம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 இளைஞர்கள் பிரதமர் மோடியை ஆபாசமாக பேசி, மோடி கூறுவது போல ‌கைகளை கழுவினால் கொரோனா போகுமா, அதுபோல் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றினால் கொரோனா சாகுமா என பிரதமரை ஆபாசமாக பேசி திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுமார் 46 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் முழுவதும் அச்சில் ஏற்றமுடியாத வாசகங்களை பேசியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த மார்த்தாண்டம் போலீஸார் வீடியோவில் ஆபாசமாக பேசிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெயர் நிதின், அபிஷ் மனு, விஜின், பவின் நிஷாந்த் என தெரிய வந்தது. அதில் நிதின் என்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. வீடியோ வெளியிட்ட 5 பேரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களைக் கைது செய்த போலீஸார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு