Published:Updated:

`மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமி இறப்பு கொலையே?' - மருத்துவ அறிக்கையில் தகவல்!

ராம் பிரசாத்
குருபிரசாத்
தி.விஜய்

ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் சம்பத்குமார் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

பழனிச்சாமி
பழனிச்சாமி

கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் வீடு மற்றும் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்தது. மார்டின் நிறுவனத்தில் பணியாற்றிய காசாளர் பழனிச்சாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பழனிச்சாமி வெள்ளியங்காடு அருகே உள்ள ஓடையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழனிச்சாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் கூறிய நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.

பழனிச்சாமி உறவினர்கள்
பழனிச்சாமி உறவினர்கள்

பழனிச்சாமி உடலில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ``வருமானவரித்துறை கொடுத்த டார்ச்சரும் மார்ட்டின் குடும்பத்தினரும்தான் பழனிச்சாமி மரணத்துக்குக் காரணம்" என்று அவரின் குடும்பத்தினர் புகார் எழுப்பினர். முக்கியமாக, ``வருமானவரித்துறை அதிகாரிகளிடம் உண்மையைச் சொன்னதால், மார்ட்டின் மற்றும் அவரின் மனைவி லீமா ரோஸ் ஆகியோர் என் கணவரைக் கொன்றுவிட்டனர்" என்று பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி குற்றம்சாட்டினார்.

பழனிச்சாமியின் மகன் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டது. ஏற்கெனவே நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை. எனவே, மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். மேலும், ஏற்கெனவே உடற்கூறாய்வு செய்த மருத்துவக் குழு அல்லாத இரண்டுக்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரைக் கொண்டு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் மனுதாரர் வைத்த கோரிக்கையின்படி, சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக மருத்துவர் சம்பத்குமார் என்பவரை சேர்க்க வேண்டும். உடற்கூறாய்வு செய்யும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.

பழனிச்சாமி
பழனிச்சாமி

ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் சம்பத்குமார் இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் நீதிபதி ராமதாஸிடம் முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து பேசிய பழனிச்சாமி மகன் தரப்பு வழக்கறிஞர், ``பழனிச்சாமி குடும்பத்தினர் தரப்பில் குழுவில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் சம்பத்குமார் நீதிபதி ராமதாஸிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் நீரில் மூழ்கி இறந்துள்ளாரா என்பதை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் டயட்டம் டெஸ்டில் தண்ணீர் புகுந்த பாசிப் பொருள்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அதேபோல மூச்சுத் திணறி இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள இரண்டு மருத்துவர்களின் அறிக்கைகள் வந்தவுடன் தான் கொலையா தற்கொலையா என்பது தெரியவரும்” என்றார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை முதல்வர் சம்பத்குமார் ``பழனிச்சாமி கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணையின் இறுதியிலே தான் தெரியவரும். ஆனால், பழனிச்சாமி நீரில் மூழ்கி இறக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.