புனேவிலுள்ள பீமா ஆற்றில் கடந்த 18-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இதுவொரு தற்கொலை என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது இது திட்டமிடப்பட்ட கொலை என 4 பேரை போலீஸார் இன்று கைதுசெய்திருக்கின்றனர்.

மேலும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்ட தகவலின்படி கைதுசெய்யப்பட்டவர்கள், இதில் பாதிக்கப்பட்ட மோகன் என்ற 50 வயதுடைய நபரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பேசிய புனே கிராமப்புற காவல்துறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் போயிட், ``தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரின் மகன், சில மாதங்களுக்கு முன்பு லோனிகண்டில் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். ஆனால் இறந்தவரின் தந்தை, தன்னுடைய உறவினர்தான், தன்னுடைய மகனைக் கொன்றுவிட்டதாக சந்தேகமடைந்தார்.

அதன்பிறகு அந்த நபரும் அவரின் மூன்று சகோதரர்களும், உறவினரின் மொத்த குடும்பத்தையும் அழிக்கத் திட்டம் போட்டார்கள். பின்னர் ஜனவரி 18-ம் தேதி காலையில் நான்கு சகோதரர்களும், 50 வயது முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், மூன்று பேரன்களை பீமா ஆற்றில் வீசிக் கொன்றனர்" என்று தெரிவித்தார்.
மோகனின் இளைய மகனுக்கு உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் அவர் வீட்டைவிட்டு, அந்தப் பெண்ணுடன் வெளியேறிவிட்ட நிலையில், மனஉலைச்சலுக்கு ஆளான மோகன் குடும்பத்தினர், ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், கொலையாளிகளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.