மயிலாடுதுறை: மகளுக்கு திருமணம்; திருடுபோன 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம்! -அதிர்ச்சியில் குடும்பம்
திருவெண்காட்டில் நடந்த கோயில் திருவிழாவுக்கு கலந்து கொள்வதற்காக ராஜேஸ்வரி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு சென்றவர், அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை ஊர் திரும்பியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட விளநகர் மெயின்ரோடு பகுதியச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரின் வீட்டில் நகைகள், லட்சக்கணக்கில் பணம் கொள்ளைப்போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாந்தகுமார் கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் மனைவி ராஜேஸ்வரி மகள்கள் சௌமியா, சிவானி ஆகிய மூவரும் வசித்து வருகின்றனர். சாந்தகுமாரின் மூத்தமகள் சௌமியாவுக்கு 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ராஜேஸ்வரி வங்கியில் இருந்த திருமணத்திற்காக வாங்கிய நகைகள் 100 பவுன், ரூ.10 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் திருவெண்காட்டில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜேஸ்வரி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு சென்றவர், அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை ஊர் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, அவரது மகள்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது..