Published:Updated:

`அப்பார்ட்மென்ட் மாத வாடகை மட்டுமே ரூ.15 லட்சம்!'- அரசுப் பணத்தை விரயம்செய்த ஐ.எப்.எஸ் அதிகாரி ரேணு

தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு (apartment) மாத வாடகையாக 15 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

ரேணு பால்
ரேணு பால்

இந்தியாவின் ஆஸ்டிரிய தூதரான ரேணு பாலின் மீது, அரசாங்கத்தின் பணத்தை முறையற்ற முறையில் செலவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. ரேணு பால் 1988 பிரிவைச்சார்ந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஆவார். தற்பொழுது ஆஸ்திரியாவின் இந்தியத் தூதராக உள்ள இவர், தான் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு (apartment) மாத வாடகையாக 15 லட்சம் ரூபாய் அளித்துள்ளார் என்று மத்திய புலனாய்வு ஆணையம் (CVC) குற்றம் சாட்டியுள்ளது.

ரேணு பால்
ரேணு பால்

கடந்த செப்டம்பர் மாதம் முதலே மத்திய புலனாய்வு ஆணையம் இவ்விவகாரத்தை விசாரித்து வந்தது. தற்போது புலனாய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ரேணு பால் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதி இல்லாமல் தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு லட்சக்கணக்கில் அரசாங்க பணத்தை விரயம் செய்துள்ளார். அரசாங்கம் அனுமதிக்கும் சேவைகளை முறைகேடாகப் பயன்படுத்துதல், செலவு செய்யாத சேவைகளுக்கான மதிப்புக் கூட்டு வரியைத் திரும்பப் பெற முயலுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரேணு பால் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அவர் தன் பதவிக்கு உரிய அதிகாரத்தை இனிமேல் பயன்படுத்த முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிரடி அறிவிப்பு விடுத்திருக்கிறது. ஆனால், இது குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார், "ரேணு பால் குற்றம் செய்துள்ளார் என்பதற்காக அவரைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யவில்லை என்றும் நிர்வாகத்தில் ஏற்படும் இயல்பான இடமாற்றம்தான்" என்றும் கூறியுள்ளார்.

ரேணு பால்
ரேணு பால்

ரேணு பாலின் தூதரக பணி அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அவர் மீது எழுந்த இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய புலனாய்வு ஆணையம் என்பது மத்திய அரசுப் பணியாளர்கள் பற்றி எழும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையமாகும். 1964-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆணையம், 2003-ம் ஆண்டு சட்ட வரம்புக்கு உட்பட்ட ஆணைய அந்தஸ்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைமுறை மூலம் பெற்றது. இதற்கான தலைவரை குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து நியமிப்பர்.