Published:Updated:

இன்ஸ்டாகிராம் அறிமுகம்; காதல் தொல்லை! -மருத்துவ மாணவியைச் சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

மருத்துவ மாணவியை  சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை
மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞர் காதல்வலை வீசிய நிலையில் அதை ஏற்க மறுத்துள்ளார் மருத்துவக் கல்லூரி மாணவி. அந்த மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், நாறாத்து இரண்டாம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் மானஷா (24). இவரின் தந்தை மாதவன் கண்ணூர் போக்குவரத்து காவல்துறையில் ஹோம்கார்டாகப் பணியாற்றிவருகிறார். தாய் பீனா பள்ளி ஆசிரியராக இருக்கிறார். மானஷா கொச்சி கோதமங்கலம் நெல்லிக்குழி இந்திரா காந்தி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இவர் தன்னுடைய தோழிகளுடன் கல்லூரிக்கு அருகிலேயே ஒரு வீட்டின் மேல் பகுதியில் அறை எடுத்து வசித்துவந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் மானஷா தங்கியிருந்த அறைக்கு கண்ணூர் மாவட்டம், தலசேரியை அடுத்த மேலூரைச் சேர்ந்த ராஹில் (32) என்பவர் சென்றிருக்கிறார். அங்கு மானஷா, அவருடன் வசிக்கும் மூன்று மாணவிகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ராஹிலிடம் `இங்கு எதற்காக வந்தாய்...’ எனக் கேட்டிருக்கிறார் மானஷா. உடனே ராஹில், மானஷாவைப் பிடித்து இழுத்து அருகிலிருந்த அறைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இதனால் பதற்றமடைந்த சக மாணவிகள் வீட்டு உரிமையாளரிடம் தகவல் சொல்வதற்காகச் சென்றுள்ளனர். அந்தச் சமயத்தில் மானஷா தங்கியிருந்த அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது மானஷாவும் ராஹிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதைப் பார்த்து மாணவிகள் அலறினர்.

ராஹில், மானஷா
ராஹில், மானஷா

சத்தம் கேட்டுக் கூடிய அந்தப் பகுதி மக்கள் இருவரையும் ஆட்டோவில் கோதமங்கலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோதமங்கலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று இரண்டுபேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர்.

கேரளா: குறையாத கொரோனா... 16 நாள்களில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!

மானஷாவின் தலை மற்றும் மார்பின் கீழ் பகுதி என இரண்டு இடங்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. ராஹிலின் தலைப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மானஷாவும் ராஹிலும் இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகியிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் ராஹிலின் நட்பைத் துண்டித்திருக்கிறார் மானஷா. ஆனால் ராஹில் காதல்வலை வீசி, தொடர்ச்சியாக மானஷாவுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் ராஹிலைவிட்டு விலகிச் சென்றிருக்கிறார் மானஷா. ராஹிலின் தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். மானஷாவின் தந்தை மாதவன் கண்ணூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ராஹிலை விசாரித்த போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டு மாணவி கொலை செய்யப்பட்ட கட்டடம்
துப்பாக்கியால் சுட்டு மாணவி கொலை செய்யப்பட்ட கட்டடம்

இதற்கிடையில் கடந்த 4-ம் தேதி வாக்கில் நெல்லிக்குழிக்குச் சென்று லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார் ராஹில். அப்போது மானஷா தங்கியிருக்கும் இடம் உள்ளிட்டவற்றைக் கண்காணித்துவிட்டு மீண்டும் கண்ணூர் சென்றிருக்கிறார். அதன் பிறகு நேற்று துப்பாக்கியுடன் நெல்லிக்குழிக்குச் சென்று மானஷாவைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கிறார் ராஹில். அவருக்குத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவி கொலைசெய்யப்பட்ட சம்பவம் கேரளத்தை உலுக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு