Published:Updated:

திண்டுக்கல்: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு? - தனியார் கல்லூரி தாளாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு!

திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாளாளரைக் கைது செய்யக்கோரி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது . இந்தக் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அ.ம.மு.க கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவரின் கல்லூரி விடுதியில் 300 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுதி மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரைக் கைது செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல் பழநி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நர்சிங் மாணவிகள் சிலரிடம் விசாரித்தோம். ``கல்லூரி விடுதி காப்பாளராக அர்ச்சனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் தான் தாளாளரிடம் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள் என மாணவிகளை வற்புறுத்தினார். அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வார். இதனால் சில மாணவிகள் கல்லூரியிலிருந்து விலகிச் சென்றனர். தாளாளர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதால், நேற்றுகூட இரண்டு மாணவிகள் கல்வி மாற்றுச்சான்று வாங்கிக்கொண்டு விலகிச்சென்றனர்.

மறியல்
மறியல்

பிறகு தான் தாளாளர் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததும். மாணவிகளைத் தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரின் மற்றொரு கல்லூரிக்குக் கூட்டிச் செல்வதும் தெரியவந்தது. மேலும் மாணவிகளுக்கு உணவுப் பொருள்கள், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து நடனமாட வைத்து, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்குக் கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா தான் முழு உடந்தையாக இருக்கிறார். எனவே கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் எனக் காலை 10 மணிக்குக் கல்லூரிக்குள் போராட்டத்தை அறிவித்தோம். பிறகு கல்லூரியிலிருந்து வெளியேறி திண்டுக்கல் பழனி இருப்புப் பாதை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அப்போது போலீஸார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். மாணவிகள் 20 பேர் சேர்ந்து புகார் மனு அளித்திருக்கிறோம். போலீஸார் எங்களைக் கலைந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். தாளாளர் மற்றும் விடுதி காப்பாளரைக் கைது செய்யும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக் கூறி திண்டுக்கல் பழநி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்'' என்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதே போல 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுரபி ஜோதிமுருகன் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி ஜோதி முருகனைக் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

மாணவிகள்
மாணவிகள்

கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் 'வேட்டைநாய்' என்ற திரைப்படத்தில் வில்லனாகவும், கருப்பன், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் கேட்டோம். ``போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேசினேன். அவர்கள் தாளாளரையும், விடுதி காப்பாளரையும் கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களிடம் புகார் பெற்று இருவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விரைவில் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

திண்டுக்கல்: சிறார் வதை வீடியோ பதிவுகள்... சுமார் 9 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ ரெய்டு, விசாரணை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு