Published:Updated:

`ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டரை லட்சம்!’ - ரூ. 10 கோடிக்கு மேல் சுருட்டிய மோசடிக் கும்பல்!

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

ஒரு லட்சம் முதலீடு செய்தால், தினமும் 2,500 ரூபாய் வீதம் 100 நாள்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குமென சமூக வளைதளங்களில் விளம்பரப்படுத்தி, பல கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறது ஒரு கும்பல்.

கைதான நிறுவன ஊழியர்கள்
கைதான நிறுவன ஊழியர்கள் ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சந்தன டிப்போ மேற்கு வீதியில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ்’ என்னும் நிறுவனம், கடந்த ஓராண்டாக இயங்கிவருகிறது. இந்த நிறுவனம், ‘ரிலீஃப் ஹெர்பல்ஸ்’ என்ற பெயரில் ஆண்மைக்குறைவு, மூலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருந்துகளை டீலர்கள் மூலம் விற்பனை செய்தும் வந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநரான தங்கராஜ் என்பவர், ‘எங்கள் நிறுவனத்தில் 300 ரூபாய்க்கு தயாரிக்கும் மருத்துகளை வெளிநாட்டில் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துவருகிறோம். எனவே, எங்கள் நிறுவனத்தில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால், தினமும் 2,500 ரூபாய் வீதம் 100 நாள்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என ஓர் அதிரடி அறிவிப்பை சமூக வளைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

முதலீடு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள்
முதலீடு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள்

இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும், நிறுவனத்திற்கு நேரடியாக வந்து, இயக்குநர் தங்கராஜை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஸ்டாம்ப் பேப்பரில் அக்ரிமென்ட் போட்டும், செலுத்திய பணத்திற்கான இரட்டிப்புத் தொகையை செக் போட்டும் கையில் கொடுத்திருக்கின்றனர். இதை நம்பி, ஆரம்பத்தில் ஒருசிலர் சில லட்சங்களை முதலீடு செய்ய, அவர்களுக்கு தினமும் 2,500 ரூபாயை நிறுவனம் கொடுத்திருக்கிறது. பணத்தை முதலீடு செய்த பலருக்கும், எந்தவித பிரச்னையுமில்லாமல் இரட்டிப்பு லாபத்தை சில மாதங்களுக்கு கொடுத்திருக்கின்றனர். இந்த லாபத்தைக் கண்டு திக்குமுக்காடிப்போனவர்கள், நிலத்தை அடமானம் வைத்தும், கையிலுள்ள பல லட்ச ரூபாயைக் கொட்டியும் முதலீடு செய்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில், பல கோடி ரூபாயை வாரிக் குவித்ததும், வழக்கம்போல நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பணத்தைப் பறிகொடுத்த பலர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் ஒருசிலர், நிறுவனத்தின் ஊழியர்களான பிரபாகரன், துரைசாமி, பொன்னுசாமி ஆகிய மூன்று பேரை பொறி வைத்துப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

`ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டரை லட்சம்!’ - ரூ. 10 கோடிக்கு மேல் சுருட்டிய மோசடிக் கும்பல்!

அவர்களைக் கைதுசெய்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் ஊழியர்கள் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விசாரணையின் முடிவிலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வரும்போதும் தான் இந்த மோசடி சம்பந்தமான பல உண்மைகள் உடைபடும்.