Published:Updated:

``15 தையல் போட்டிருக்கு, இப்ப வீட்ல இருக்கேன்!'' - சங்கிலி திருடனை பிடித்த சென்னை தனலட்சுமி

ஆ.சாந்தி கணேஷ்

''ஓடி வந்துடுன்னு எல்லாரும் கத்துனாங்க. ஆனா. நான் அவன் கத்தியை விடலையே!''

தனலட்சுமி
தனலட்சுமி

ஊரெல்லாம் தனலட்சுமி அம்மாவைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் இவர். கடந்த சனிக்கிழமை இரவு, வீட்டுப்பக்கத்தில் இருந்த கடைக்குப் போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார். அந்த நேரம் பைக்கில் வந்த சங்கிலித் திருடன் ஒருவன், அவருடைய தாலிச்செயினை அறுத்திருக்கிறான். தப்பியோட முயன்றவனை, தனலட்சுமி தடுக்க முயல, கத்தியால் அவருடைய இடது கையில் வெட்டியிருக்கிறான். ரத்தம் சொட்டச் சொட்ட சங்கிலித் திருடனுடன் போராடி, அவனை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்திருக்கிறார் தனலட்சுமி. அவருடைய தைரியத்துக்கு வாழ்த்துகள் சொல்லி, நடந்ததைப் பற்றி விசாரித்தோம்.

"கையால அறுத்தானா, ஏதாவது கத்தி மாதிரி வெச்சு அறுத்தானா, எதுவுமே தெரியலை.''
தனலட்சுமி

''போன சனிக்கிழமை அன்னிக்கு நைட் ஒரு ஒன்பது மணி இருக்கும்மா. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊத்தறதுக்காக, பூ, பழம், வெத்தலை - பாக்கு, அம்மனுக்கு சாற்ற புடவைன்னு சில சாமான்கள் வாங்கிட்டு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். என் வீட்டுக்காரர், 'சாமான் வாங்கிட்டீன்னா போன் பண்ணு. நான் பைக் எடுத்துட்டு வரேன்'னார். நான்தான், 'வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற தெருவுலதான் கடையெல்லாம் இருக்கு. இதுக்குப் போயி நீங்க பைக் எடுத்துட்டு வரணுமா. நான் நடந்தே வந்துடுறேன்'னு சொல்லிட்டு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன்.

அப்போ என் எதிரே வந்த பைக்காரன் ஒருத்தன், என் பக்கத்துல வண்டியை நிறுத்திட்டு, 'இந்திரா நகருக்கு எப்படிப் போகணும்'னு கேட்டான். என் ரெண்டு கையிலேயும் பைகள் இருந்ததாலே, தலையை உயர்த்தி 'அதோ எதிர்த்தெருதான்பா'ன்னு சொன்ன அதே நேரத்துல, டக்குனு என் கழுத்துல இருந்த தாலிச்செயினை அறுத்துட்டான்.

மகன் திருமணத்தின்போது
மகன் திருமணத்தின்போது

கையால அறுத்தானா, ஏதாவது கத்தி மாதிரி வெச்சு அறுத்தானா, எதுவுமே தெரியலை. செயின்ல பாதித்துண்டு அவன் கையில இருக்கு. மீதிச்செயின் தரையில விழுந்துகிடந்துச்சு. அதை எடுக்கிறதுக்காக குனிஞ்சவனை வண்டியோடப் பிடிச்சு கீழே தள்ளிட்டேன். அவன் எழுந்திருச்சு மறுபடியும் செயினை எடுக்க வந்தான், நான் மறுபடியும் பிடிச்சுத் தள்ளினேன். இந்தச் சம்பவம் நடந்துக்கிட்டிருக்கிறப்போ, அந்தத் தெருவுல எங்களுக்கு முன்னாடி ரெண்டு ஆம்பளைங்க, பின்னாடி ரெண்டு ஆம்பளைங்க நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்களே தவிர, உதவிக்கு வரலை.

உடனே நான், 'காப்பாத்துங்க. இவன் என் தாலிச்செயினை அறுத்துட்டான்'னு சத்தமா கத்த ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் அவங்க என்னைக் காப்பாத்த ஓடிவந்தாங்க. ஏதோ குடும்பத் தகராறுன்னு நினைச்சுட்டாங்கபோல!'' என்றவரிடம், கையில எப்படி காயம் வந்தது என்றோம்.

கட்டைவிரல் பாதி அறுப்பட்டுத் தொங்க, உள்ளங்கையை ஆழமா கத்தி அறுத்துடுச்சு.
தனலட்சுமி

''பப்ளிக் என் சத்தத்தைக் கேட்டு ஓடி வரவும், அவன் பாக்கெட்ல இருந்து ஒரு கத்தியை எடுத்தான். அந்தக் கத்தியை என் கழுத்தை நோக்கி வீசினான். உடனே, என்னைக் காப்பாத்த வந்தவங்க எல்லாம், 'ஓடிடும்மா ஓடிடும்மா' கத்த ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஆவேசம் தாங்க முடியலை.

அது வெறும் தங்கச்சங்கிலி இல்ல. தாலிச் செயின். மறுநாள் அம்மனுக்குப் பூஜை வைச்சுருக்கேன். கூழ் ஊத்தப்போறேன். இந்த நேரத்துல இப்படியொரு கொடுமையைப் பண்ணிட்டானேன்னு மனசுக்குள்ள கோபமான கோபம். என் கழுத்தை அறுக்கிறதுக்காக அவன் வீசின கத்தியை அப்படியே இடதுகையால இறுகப் பிடிச்சிட்டேன்.

தனலட்சுமி
தனலட்சுமி

உடனே அவன் சரக்குன்னு கத்தியை என் கையைவிட்டு உருவ, கட்டைவிரல் பாதி அறுப்பட்டுத் தொங்க, உள்ளங்கையை ஆழமா கத்தி அறுத்துடுச்சு. அதுக்குள்ளே பப்ளிக் எல்லாம் ஒண்ணுசேர்ந்து அவனை மடக்கிப் பிடிச்சு காவல்துறையில ஒப்படைச்சுட்டாங்க'' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிற தனலட்சுமி அம்மாளின் இடதுகையில் 15 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

"எனக்கு ஐம்பது வயசு ஆகுதுங்க. தனியா வர்ற லேடீஸ்; கொஞ்சம் வயசானவங்களாப் பார்த்துதான் இவனுங்க செயின் அறுக்கிறாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான், தரையில கிடந்த அந்தப் பாதி செயினை நான் எடுக்கவே இல்லை. இவனை விடக்கூடாது. என்னை மாதிரி இன்னொரு பொம்பளைக்கு இப்படி நடக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் அவனை எதிர்த்து நின்னேன்.

"நான் ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் திருடன்கூட போராடினதை எல்லாரும்தான் பார்த்தாங்க. மூணு பேராவது சாட்சி சொல்ல வர மாட்டாங்களா...''
தனலட்சுமி

அந்தத் தாலிச்செயின் போலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கு. அதுல இருந்த தாலியை மட்டும் கேட்டு வாங்கிட்டு வந்து மஞ்சக்கயிறுல கோத்துப் போட்டிருக்கேன்மா.

போலீஸ்காரங்க, 'நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த மூணு பேர் சாட்சிச் சொன்னா, அந்தத் திருடனுக்கு 10 வருஷம் வரைக்கும் ஜெயில் தண்டனை வாங்கிக் கொடுத்துடலாம்'னு சொல்றாங்க. நான் ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் திருடன்கூட போராடினதை எல்லாரும்தான் பார்த்தாங்க. மூணு பேராவது சாட்சி சொல்ல வரமாட்டாங்களா?'' என்று கேட்கிறார் தனலட்சுமி.

சாட்சிகள் 'சொல்ல வேண்டும்' என்பதுதான் நம் விருப்பமும்.