Published:Updated:

`மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; சமரசம்!' - பின்னணி என்ன?

மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள்
மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள்

மேல்மருவத்தூர் சித்தர்பீடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தினேஷ் மற்றும் அவருடன் வந்த கணபதி என்பவரைத் தனி அறைக்கு அழைத்துச்சென்று, உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். ரத்தக் காயங்களுடன் அவர்கள், மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு, மார்கழி மாத்தில் மாலை அணிந்து அம்மனை வழிபடுவது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வந்து குவிவார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த, செவ்வாடைப் பணியாளர்களை சித்தர்பீடம் தரப்பில் நியமிப்பார்கள். செவ்வாடை பக்தர்கள் குவியும் இந்த சீசனில்... போக்குவரத்து, வியாபாரம் போன்றவற்றில் சிறு சிறு பிரச்னைகள் எழுவதுண்டு.

மேல்மருவத்தூர் சித்தர்பீடம்
மேல்மருவத்தூர் சித்தர்பீடம்
Vikatan

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேல்மருவத்தூர் சித்தர்பீடத்தில் பணிபுரியும் செவ்வாடைப் பணியாளர்களை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சரமாரியாக அடித்திருக்கிறார்கள். தலையிலும், உடலிலும் பலத்த காயங்களோடு மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சித்தர்பீடப் பணியாளர்கள் தாக்கப்பட்டதற்கு காவல்துறையினர் வழக்குப்பதியவில்லை. இதற்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதுகுறித்து விசாரித்தோம். அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்தியநாதன் என்பவர், கடந்த வியாழனன்று மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு சவாரி ஏற்றிச்சென்றுள்ளார். அப்போது, `இந்த வழியாக வரக்கூடாது' என மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள் தகராறு செய்துள்ளனர். பின்னர், சத்தியநாதனை கடுமையாகத் தாக்கி, அவரின் ஆட்டோவைப் பிடுங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

மேல்மருவத்தூர் பக்தர்கள்
மேல்மருவத்தூர் பக்தர்கள்

அவர்களிடமிருந்து ஆட்டோவைத் திரும்பப் பெறமுடியாது என்று எண்ணிய சத்தியநாதன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், செவ்வாடைப் பணியாளர்கள்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை திரும்பப் பெறுமாறு வற்புறுத்தி, சமரசம் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

அதேநாளில், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், சித்தர் பீட அன்னதானக் கூடத்திற்குத் தன்னுடைய ஆட்டோவில் உணவு ஏற்றிச்சென்றுள்ளார். அந்த உணவை, அவரே இறக்கிவைக்க வேண்டும் என சித்தர்பீடப் பணியாளர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தினேஷ் மற்றும் அவருடன் வந்த கணபதி என்பவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியி ருக்கிறார்கள். ரத்தக் காயங்களுடன் அவர்கள், மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட சில அமைப்புகள், மேல்மருவத்தூர் சித்தர்பீட நிர்வாகத்திற்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர்.

மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள்
மேல்மருவத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள்

இந்த நிலையில், அன்று மாலையே தினேஷ் மற்றும் கணபதியைத் தாக்கியவர்களில் 4 பேர் சோத்துப்பாக்கம் பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது, பழிதீர்க்கக் காத்திருந்த தினேஷ் ஆதரவாளர்கள், சித்தர்பீடப் பணியாளர்களை அங்கேயே சரமாரியாகத் தாக்கியி ருக்கிறார்கள். ரத்தக் காயங்களுடன் மேல்மருவத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். மேல்மவருத்தூர் சித்தர்பீடப் பணியாளர்கள் தரப்பிலும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாருக்கு வழக்குப் பதிந்தால், எதிர்த் தரப்பினரின் புகாருக்கும் வழக்குப் பதியவேண்டியிருக்கும் என்பதால், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் - படங்கள் வைரலானதன் பின்னணி!

இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் சரவணனிடம் பேசினோம்.``இரண்டு சம்பவங்களிலும் புகார் கொடுத்தவர்கள் அவர்களுக்குள்ளாகவே சமரசம் செய்துகொண்டார்கள். இதனால் வழக்குப் பதியவில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கோயிலுக்குள் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், அந்தச் சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு வரவில்லை. கோயிலுக்கு வெளியே நடைபெற்றிருந்தால், அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு