Published:Updated:

திகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு!

திகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
திகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு!

நள்ளிரவில் நடுக்காட்டில் தனித்துவிடப்படும் பெண்கள்

‘ஒலிவீதி’, ‘தேள்வாள்’ இந்த இரண்டு சொற்களும், கேட்பதற்கும் உச்சரிப்பதற்கும் இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன அல்லவா? ஆனால், இவற்றின் பின்னால் சகிக்க முடியாத பிற்போக்குத்தனமும், பெண்கள்மீது திணிக்கப்படும் மிகக் கொடுமையான ஒரு வழக்கமும் இருக்கிறது. குருதிக்கறை படிந்த அதன் பின்னணி நம்மைத் திகிலடையச் செய்கிறது!

பின்னிரவு 2 மணி. நீலகிரியை மொத்தமாக மூடியிருந்தது மூடுபனி. கூடவே இடி மின்னலுடன் பெருமழை. பனியும் மழைநீரும் பின்னிப் பிணைந்து ஊரையே உருக்கிக் கொண்டிருந்தன. வானத்தின் மிரட்டலைக் கண்டு வனத்துக்குள்ளிருக்கும் நாய், நரி, யானைகள்கூட குளிருக்குள் ஒடுங்கிப் பதுங்கியிருந்தன. மின்சார வசதி இருப்பதாகக் கூறப்பட்டாலும், இயற்கைச் சீற்றங்களால் பாதி நாள்கள் இருண்டேகிடக்கும் அந்த மலைக் கிராமம், அப்போதும் அப்படித்தான் இருளுக்குள் கிடந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காட்டு வழியும் தீராத வலியும்!

திடீரென அடிவயிற்றுக்குக் கீழே அசெளகர்யமாக ஏதோ புரட்டியெடுக்க... வலி தாளாமல் கண் விழிக்கிறாள் அந்தச் சிறுமி. பெண்ணுடலில் இயற்கை நிகழ்த்தும் மாதந்தரச் செயல்பாடு அது. ஒரு பொதியிலிருந்து பழைய சேலையை உருவி எடுக்கிறாள் சிறுமி. அருகில் படுத்திருந்த அம்மா விழித்துக்கொள்கிறார்.

விஷயத்தைப் புரிந்துகொண்டவர், “ஏண்டி, உனக்கு நேரங்காலமே இல்லையா...” என்று கடிந்தபடியே, இருட்டில் தீப்பெட்டியைத் துழாவி, மண்ணெண்ணெய் விளக்கைப் பற்றவைக்கிறார். கணவனை எழுப்பி காதில் கிசுகிசுக்கிறார். எழுந்துகொண்டவர், அவசர அவசரமாகக் கோணிப்பையைக் கிழித்து, நீண்ட கழி ஒன்றில் கட்டி, மண்ணெண்ணெயில் நனைத்து அதைத் தீப்பந்தமாக மாற்றுகிறார். அதுவரை வீட்டின் மூலையில் ஒருவித பதற்றத்துடனேயே அமர்ந்திருந்த சிறுமியின் கையில் கொஞ்சம் கிழிந்த துணிகளையும், போர்வையையும், கோணிப்பை ஒன்றையும் கொடுத்து, தந்தையுடன் அனுப்பிவைக்கிறார் அச்சிறுமியின் தாய்.

திகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு!

இருவரும் சுமார் அரை கிலோமீட்டர் தாண்டி ஊருக்கு வெளியே அடர்ந்த தேயிலைத் தோட்டத்தின் நடுவே இருக்கும் ‘அந்த வீட்டுக்கு’ மழையில் நனைந்தபடி செல்கிறார்கள். வீட்டுக்கூரைச் சந்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து சிறுமியிடம் கொடுக்கிறார் அப்பா. இருண்டு கிடக்கும் அந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவள், தீப்பந்த வெளிச்சத்தில் மெழுகுவத்தியைத் தேடிப்பிடித்து ஏற்றுகிறாள். பிறகு, கையில் எடுத்துவந்த கோணியை விரித்துப்போட்டு, அதில் உட்கார்ந்துகொள்கிறாள். புரியாத இந்தக் கொடுமையான வழக்கத்தை நினைத்து நொந்தபடி, எதையோ வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறாள். தூரத்தில் காட்டு நாய்களும் நரிகளும் ஊளையிடும் சத்தம் கேட்கிறது. அடிக்கடி யானைகள் வந்து செல்லும் பகுதி வேறு. சிறிது நேரம் காத்திருந்த தந்தையும் அதிகாலை 4 மணிக் கருக்கலில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார். இன்னும் ஐந்து நாள்கள் அந்தச் சிறுமிக்கு இந்த வீடும், தனிமையும், வயிற்றுவலியும், குருதி துடைக்கக் கொஞ்சம் கந்தலும் மட்டுமே துணை.

இது ஏதோ ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த காட்சியல்ல... நீலகிரி மாவட்டம், கொடநாடு அருகிலுள்ள பாமுடி எனும் படுகர்ஹட்டியில் (கிராமத்தில்) நடந்துகொண்டிருக்கும் உண்மைச் சம்பவம். சம்பந்தப்பட்ட சிறுமி ஒருவர் நம்மிடம் விவரித்த காட்சியைத்தான் அப்படியே எழுதியிருக்கிறோம். பாரம்பர்யம், கலாசாரம் என்ற பெயரில், பெண்களின் உடலியல் இயல்புகளில் ஒன்றான மாதவிடாயை ‘தீட்டு’ என ஒதுக்கி, ஒவ்வொரு மாதமும் அந்த நாள்களில் ஊருக்கு மத்தியிலோ அல்லது ஊருக்கு வெளியிலோ அமைக்கப்பட்டிருக்கும் தனி வீட்டில் பெண்களைத் தங்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் கொடுமை இன்றும் அங்கே வழக்கத்திலிருக்கிறது. ‘ஒலிவீதி’ அல்லது `தீட்டு வீடு’ என்று அதை அழைக்கிறார்கள் கிராம மக்கள். அந்தக் கிராமத்துக்குச் சென்றோம்...

சமூதாயக்கூடம், விளையாட்டு மைதானம், சிறு கடைகள், நெருக்கமான குடியிருப்புகள் என ‘வளர்ந்த’ கிராமமாகவே இருந்தது ஊர். எதிர்ப்பட்ட முதியவர் ஒருவரிடம், ‘‘ஒலிவீதி எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டோம். ஏறஇறங்கப் பார்த்தவர், சந்தேகத்தோடு “ஏன் அதையெல்லாம் நீங்க கேட்குறீங்க? என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்துபோனார். கொஞ்சம் அலைந்து, அந்த வீடுகளைக் கண்டுபிடித்தோம். ஊருக்கு ஒதுக்குப்பு றத்திலுள்ள தேயிலைத் தோட்டத்துக்கு நடுவில், செங்கல்லால் கட்டப்பட்ட ஓட்டு வீடு அது. அதன் அருகிலேயே அதைவிடச் சிறிய வீடு ஒன்றும் இருந்தது.

‘‘நாய், நரிகள் வந்து கதவைப் பிறாண்டும்! ‘‘

நமது சோர்ஸ் ஒருவர் ஏற்பாட்டின் பேரில், அங்கிருந்த பெண்மணி ஒருவர் இது குறித்து நம்மிடம் பேசினார். ‘‘நான் இந்த ஊருக்குக் கல்யாணமாகி வந்திருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. நான் பொறந்த ஊர்லயும் இங்கே இருக்குற மாதிரியே பழக்கம் இருந்தது. பொண்ணுங்க வயசுக்கு வந்ததுலருந்து, ஒவ்வொரு மாசமும் அந்த நாள்கள்ல கண்டிப்பா இங்கே வந்துதான் தங்கணும். ராத்திரி, பகல்னுல்லாம் கணக்கு இல்லை... தீட்டாவறது எந்த நேரமாயிருந்தாலும் வீட்டைவிட்டு வெளியே வந்துடணும். சில டைம் அந்த வீட்ல துணைக்கு ரெண்டொருத்தர் இருப்பாங்க. சில டைம் யாரும் இருக்க மாட்டாங்க. அப்பல்லாம் பயந்து பயந்தே சாகணும். நைட்டு முழுசா தூக்கம் இருக்காது. நடு ராத்திரியில வீட்டு வாசல்ல காட்டு நாய், நரியெல்லாம் வந்து கதவைப் பிறாண்டும். ஒரு தடவை யானைக் கூட்டம் சுத்திக்கிடுச்சு. அதுங்க ஓட்டைப் பிரிச்சு, வீட்டை துவம்சம் செய்ய ஒரு நாழியாகாது. உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டே மூலையில் குத்தவெச்சு போர்வையைப் போத்திக்கிட்டு நடுநடுங்கிக்கிட்டு இருப்போம். விடிகாலையில வெளிச்சம் வந்த பிறவும் வெளியே பார்த்துதான் கால்வெக்கணும். பாம்புங்க சர்வசாதாரணமா உலாவும்.

இப்படியே அஞ்சு நாள்ல மொத மூணு நாள் பெரிய வீட்ல தங்கணும். அடுத்த ரெண்டு நாள் பக்கத்துல இருக்குற சின்ன வீட்டுல தங்கி துணிமணி, போர்வை எல்லாத்தையும் தொவைச்சு காயவெக்கணும். நடுவுல பூச்சி பொட்டு கடிச்சாலும் ஒண்ணும் செய்ய முடியாது. கைவைத்தியம் செஞ்சுதான் சமாளிக்கணும். எங்க தலைவிதியை சாமி இப்படி எழுதிவெச்சிட்டாரு. யாராலயும் மாத்த முடியாது. பொம்பளைப் பொறப்பு அப்படி’’ என்றார் வேதனையுடன்.

திகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு!

அவர் அறிமுகப்படுத்திய இன்னோர் இளம்பெண்ணிடம் பேசினோம். ‘‘நான் வெளியூர்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். சில படுகா ஊர்கள்ல இன்னைக்கும் இந்த மாதிரி பழக்கம் இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஸ்கூல் படிக்கும்போது அவ்ளோ அவமானமா இருக்கும். இங்கே வந்து தங்கினா, கரன்ட் இருக்காது, டாய்லெட் இருக்காது, படுக்க வசதி இருக்காது. எக்ஸாம் டைம்ல எப்படிப் படிக்க முடியும் சொல்லுங்க? பசங்க எல்லாம் கேவலமா பார்ப்பாங்க. இதுக்கு பயந்துக்கிட்டே பாதிப் பொண்ணுங்க ஹாஸ்டலுக்குப் போயிருவாங்க. கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த பொண்ணுங்க குழந்தைங்களைத் தூக்கிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போய் அங்கே தங்கிட்டு வருவாங்க. மீதி இருக்கறவங்க இங்கே வந்து தங்கித்தான் ஆகணும். இது இயற்கையான விஷயம்தானே... ஏதோ செய்யக் கூடாத தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போகிற மாதிரி இருக்கு சார்’’ என்று படபடவென தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

மெதுவாக கிராமத்தை வலம்வந்தோம். எதிர்ப்பட்ட கிராமத்து பெரியவர் ஒருவரிடம் இது குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். ‘‘தீட்டுப்பட்டா தீட்டு வீட்டுலதான் தங்கணும். இல்லைன்னா சாமிக் குத்தமாகிடும். ஆனா, இப்பல்லாம் பொண்ணுங்க ஏமாத்துறாங்க. சரியா தங்குறது இல்லை. வெளியூர்லருந்து கல்யாணமாகி வந்தவங்கள்ல பாதிப் பேர் அவங்க அம்மா, அப்பா வீட்ல தங்கிட்டு, அப்புறமா ஊருக்கு வர்றாங்க. இன்னும் கொஞ்சம் பேர் அவங்க வீட்டுலேயே ஒரு ஓரமா இருந்துக்குறாங்க’’ என்றார்.

‘‘தனியா மாட்டிக்கிட்டா அவ்ளோதான்!’’

படுகர் இன மக்களிடம் மட்டுமல்லாமல், நீலகிரியில் வாழும் கோத்தர் பழங்குடிகளிடமும் இதே நடைமுறை பின்பற்றப்படுவதை அறிந்து, கோத்தகிரி அருகிலுள்ள பழங்குடி கிராமத்துக்குச் சென்று விசாரித்தோம். யாரும் நம்மிடம் அந்த விஷயத்தைப் பற்றி பேச முன்வராத நிலையில், ஒரேயொரு பெண் மட்டும் தைரியமாகப் பேசினார். ‘‘கீழ் கோத்தகிரி, புது கோத்தகிரினு மொத்தம் ஏழு கிராமத்துல நாங்க வாழுறோம். இப்போதான் எங்க பொண்ணுங்க படிச்சு வெளியே வர ஆரம்பிச்சிருக்காங்க. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கு. ஆனா, இப்போ வரைக்கும் எங்க சமூகத்துல தேள்வாள் (தீட்டு வீடு) முறையை மாத்த முடிலை.

பீரியட் ஆகிட்டா ஊருக்குள்ள நடக்கக் கூடாது; குழாய்ல தண்ணி பிடிக்கக் கூடாது; ஊர்க் கோயில் பூசாரி முகத்தைப் பார்க்கக் கூடாதுனு ஏகப்பட்ட விதிமுறைகள். அவ்ளோ வேதனையா இருக்கும். `எதுக்குடா இங்கே வந்து பொண்ணா பொறந்தோம்’னு அழுகை அழுகையா வரும். ஒரு மாசம் அந்த வீட்டுக்குப் போகாட்டி, ‘ஏன் வரலை’னு பூசாரி வீட்டு பொண்ணுங்களைவிட்டு விசாரிப்பாங்க. பீரியட் வர்றதுக்குப் பல நாளுக்கு முன்னாடியே பயம் வர ஆரம்பிச்சுரும். அந்த டைம்ல வேற பொண்ணுங்களும் கூட இருந்துட்டா பரவாயில்லை. தனியா மாட்டிக்கிட்டா அவ்ளோதான். காட்டுக்கு நடுவுல தூக்கம் வராம பல நாள் முழிச்சே இருக்கணும். பீரியட் நிக்கிற வரைக்கும் இந்தக் கொடுமையை அனுபவிச்சுதான் ஆகணும்’’ என்றார் வேதனையுடன்.

ஊர் தலைவர் ஒருவரிடம் விசாரித்தோம். ‘‘முன்னே மாதிரி இல்லைங்க. இப்போ எல்லா சௌகர்யமும் அந்த வீட்ல செஞ்சு கொடுத்துருக்கோம். டாய்லெட், பாத்ரூம், கரன்ட், டி.வி-னு எல்லாமே இருக்கு. அந்த நாள்கள்ல விவசாய வேலை செய்யக் கூடாது. ஆனா, டீ இலை பறிக்கப் போகலாம். தீட்டோட வீட்ல இருந்தா, அந்த வீட்டுக்கு சாமி வராது. அதனால காலம் காலமா இதைக் கடைப்பிடிக்கிறோம். நடைமுறையை மாத்தினா, அது எங்க குலதெய்வத்துக்கே பொறுக்காது’’ என்று கடவுள்மீது பாரத்தைப் போட்டார்.

பழங்குடியினர்களுக்கான சிறப்பு நல அலுவலர் சங்கீதாவிடம் பேசினோம். ‘‘இப்படியொரு பழக்கம் அவர்களிடம் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறைக்கு எதிராக எங்களுக்குப் புகார் எதுவும் வரவில்லை’’ என்று நழுவினார்.

இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘‘எனக்கும் இது தொடர்பான புகார்கள் வந்தன. ‘இந்த வீட்டை சீரமைச்சுக் கொடுங்க’ என்று ஒரு கிராமத்திலிருந்து என்னிடம் வந்து கேட்டார்கள். ‘இது மாதிரியான விஷயங்களை ஒருபோதும் அரசு ஆதரிக்காது; அந்த வீட்டைச் சீரமைத்து தர முடியாது. நீங்கதான் மாறணும்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தோம். மாதவிடாய் பெயரில் பெண்களை ஒடுக்குவதைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். அதை மேலும் தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.

இயற்கையின் படைப்பில் தீட்டு என்றும், புனிதம் என்றும் எதுவும் இல்லை. மூடநம்பிக்கையின் பெயரில் மனிதனின் இதயத்தில் படர்ந்திருக்கும் இருளை அகற்றினால்தான் இம்மலைக்கிராமப் பெண்களுக்கு விடியல் கிடைக்கும்!