Published:Updated:

ஈரோடு: `பணம் கேட்டான், முகத்தில் எச்சில் துப்பினான்!’ - மனநலம் பாதித்தவரை எரித்துக் கொன்ற வாலிபர்

சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைவைத்து குற்றவாளியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகர் காவிரிக் கரையோரம் மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தை ஒட்டி ஈமக் காரியங்கள் செய்வதற்காக இருக்கும் திறந்தவெளிக் கட்டடத்தில், நேற்று காலை எரிந்தநிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அந்தவழியாகச் சென்ற சிலர் அதைப் பார்த்து அதிர்ந்துபோய் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், எரிந்து சாம்பலாகிக் கிடந்த சடலத்தைக் கைப்பற்றி கொலையானவர் யார், கொலையாளி யார் என விசாரணையில் இறங்கினர்.

உயிரிழந்த அசேன்சேட்டு
உயிரிழந்த அசேன்சேட்டு

விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு பாலக்காட்டூரைச் சேர்ந்த அசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரிந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, எரிக்க வேண்டிய அவசியமென்ன என கருங்கல்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணையில் இறங்கினர்.

சம்பவம் நடந்த 20-ம் தேதி நள்ளிரவில் மயானத்தைக் கடந்து சென்றவர்கள் யார் யார் என மயானத்தைச் சுற்றியிருந்த பகுதிகள், குடியிருப்புகள் போன்றவற்றில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது சம்பவம் நடந்த நள்ளிரவு நேரத்தில் ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (36) எனும் வாலிபர், மயானம் அருகே சுற்றித்திரிந்தது தெரிந்திருக்கிறது.

கொலை செய்த பிரகாஷ்
கொலை செய்த பிரகாஷ்

உடனே பிரகாஷைப் பிடித்து போலீஸார் விசாரிக்க, ``நான் ஈரோட்டுல பழைய இரும்பு, பேப்பரை எடைக்குப் போட்டு சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன். கிடைக்கிற வருமானத்துல மது அருந்துவேன். அப்படி நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் மது அருந்திட்டு வீட்டுக்குப் போறப்ப மனநலம் பாதிக்கப்பட்ட அந்த அசேன்சேட்டு என்கிட்ட வந்து ‘காசு குடு’ன்னு கேட்டான். ‘காசெல்லாம் இல்லை. தர முடியாது போ’ன்னு நான் அவனை விரட்ட, அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தை பேசினதோட, என் மூஞ்சியில எச்சியைத் துப்பிட்டான். நம்ம மேல துப்பிட்டானேன்னு எனக்கு அசிங்கமானதோட, செம கோபமாகிடுச்சு.

ஆலங்குளம்: வீட்டிலிருந்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை! - முதல் கணவர் வெறிச்செயல்

அப்பவே ரெண்டு வெளு வெளுத்துத்தான் அனுப்பினேன். அப்படியிருக்க, 20-ம் தேதி ராத்திரி நான் மது அருந்திட்டு நஞ்சப்பா நகர் மயானம் வழியா வீட்டுக்குப் போனப்ப, அசேன்சேட்டு என்கிட்ட வந்து மறுபடியும் காசு கேட்டு, நான் இல்லைன்னு சொன்னதும் அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சான். எனக்குக் கோபம் வந்ததால அவன் தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுட்டேன். அடையாளம் தெரிஞ்சா சிக்கலாகிடும்னு மயானத்துல கிடந்த துணி, பாயையெல்லாம் போட்டு அவனை எரிச்சேன்’ எனச் சொல்லி அதிரவைத்திருக்கிறார். அதையடுத்து பிரகாஷைக் கைதுசெய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து அவரைச் சிறையிலடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு