Published:Updated:

`அதெல்லாம் ஒன்னும் ஆகாது!’ - சிவசுப்ரமணியத்தின் அலட்சிய பதிலால் பறிபோன 17 உயிர்கள் #Mettupalayam

மேட்டுப்பாளையத்தில் நடந்த விபத்தில் 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சிவசுப்ரமணியம்
சிவசுப்ரமணியம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டிலிருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்துவந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சிவசுப்ரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

 சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிவசுப்ரமணியம் குடும்பத்துடன் தலைமறைவானார். இதற்கிடையில், 17 பேரின் இறப்புக்கு நியாயம் கேட்டும் சிவசுப்ரமணியத்தைக் கைது செய்யக்கோரியும் நேற்று பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தொடர் போராட்டம் காரணமாக, தலைமறைவாக இருந்த சிவசுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்தனர். அவர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

`வேலை இருக்குன்னு எங்களை விட்டுட்டுப் போனார்!’ -மேட்டுப்பாளையம் சம்பவத்தால் நிர்கதியான குடும்பம்

யார் இந்த சிவசுப்ரமணியம்?

மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர்தான் கிட்டு என்கிற சிவசுப்ரமணியம். மாற்றுத் திறனாளியான இவரது பூர்வீகம் அவினாசி எனக் கூறப்படுகிறது. இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். ஜவுளித்தொழில் மட்டுமல்லாமல் ஏலச்சீட்டு, ஹோட்டல்கள் உட்பட இன்னும் பிற தொழில்களைச் செய்துவருகிறார்.

அரசியல் கட்சிகளில் இல்லையென்றாலும் அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார் சிவசுப்ரமணியம். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் ஆகியவற்றில் உள்ளதால், மேட்டுப்பாளையம் பகுதியில் செல்வாக்கோடு வலம் வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவினாசி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக இவரது குடும்பத்தினர் மீது மோசடிப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 சிவசுப்பிரமணியம் வீடு
சிவசுப்பிரமணியம் வீடு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் உள்ள வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் வீடு வாங்கியதும் தடுப்புச்சுவர் எழுப்பியுள்ளார். இதன்காரணமாக, அந்தப் பகுதி மக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பெரிய கற்களை கொண்டு மதில் சுவர் எழுப்பியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இவரது வீட்டில் இருந்து அதிகப்படியான கழிவுநீர் வெளியேறும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். மதில்சுவரில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சிவசுப்ரமணியத்திடம் இதுபற்றிக் கூறியுள்ளார்கள். `அதெல்லாம் ஒன்னும் ஆகாது’ என இவர் அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார்.

`இனி இழப்பதற்கு எதுவுமில்லை!'- மேட்டுப்பாளையம் துயரத்திலும் பிள்ளைகளின் கண்களைத் தானம் செய்த தந்தை

இந்த நிலையில், நேற்று அதிகாலை கனமழை காரணமாக தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இவரது வீட்டைச்சுற்றி குடிசை வீடுகள்தான் இருந்துள்ளன. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். `இடி இடிப்பதுபோல் பயங்கரமாக சத்தம் கேட்டது. முதலில் நாங்கள் அப்படித்தான் நினைத்தோம். பின்னர் தான் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தெரியவந்தது’ என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

சிவசுப்ரமணியம்
சிவசுப்ரமணியம்

சுவர் இடிபாடுகளை அகற்றும் பணியை சிவசுப்ரமணியத்தின் கடையில் பணியாற்றிவந்த ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். அங்கு நடப்பதை எல்லாம் சிவசுப்ரமணியத்திடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்களை விசாரணைக்காகப் போலீஸார் அழைத்துச் சென்றனர். சிவசுப்ரமணியத்தின் இரண்டு மகன்களையும் நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னரே சிவசுப்ரமணியம் தரப்பில் இருந்து போலீஸாரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

இதையடுத்து, காரமடையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சிவசுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்தனர். நேற்றே சிவசுப்ரமணியத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது. மேட்டுப்பாளையத்தில் சூழல் மோசமாக இருந்ததால் சிவசுப்ரமணியம் கைதான விவரத்தை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.