Published:Updated:

மேட்டுப்பாளையம்: `மாதம் ரூ.50,000; கண்ணாடிக்குப் பின் ரகசிய அறை!’ - சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

மேட்டுப்பாளையம் விடுதி
மேட்டுப்பாளையம் விடுதி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கும் விடுதியில் ரகசிய அறைவைத்து பாலியல் தொழில் செய்துவந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உதகை சாலை கல்லார் ரயில்வே கேட் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதி இயங்கிவந்தது. அந்த விடுதியில் ஒரு ரகசிய அறையைவைத்து பாலியல் தொழில் நடந்துவருவதாக, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

விடுதி கண்ணாடி
விடுதி கண்ணாடி

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர்கள் திலக், பிரபாகரன், தனிப்பிரிவு தலைமைக் காவலர்கள் திருமதிகண்ணன், கங்காதரன் விஜயகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி, நாகர்கோவில் சம்பவங்கள்: பாலியல் கல்விதான் தீர்வு... எப்படி?

அப்போது அந்தத் தனியார் தங்கும் விடுதியிலுள்ள ஓர் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடி சற்று வித்தியாசமாக இருந்ததால், சந்தேகமடைந்த போலீஸார் அதைத் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அந்தக் கண்ணாடிக்குப் பின்னால், ஓர் ரகசிய அறை இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தார்கள். விசாரணையில், அந்த ரகசிய அறையில்வைத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

ரகசிய அறை
ரகசிய அறை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் செட்டி என்பவரின் மகன் மகேந்திரன் (46) மற்றும் ராஜ் என்பவரின் மகன் கணேசன் (36) ஆகியோர் குத்தகை அடிப்படையில் (மாதம் ரூ.50,000) அந்த விடுதியை நடத்திவருகின்றனர்.

இதையடுத்து, பெண்ணைவைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மகேந்திரன், கணேசன் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அந்த இளம் பெண் மட்டும் கோவை அரசு காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, கண்ணாடிக்குப் பின்னால் ரகசிய அறைவைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. `இப்படியெல்லாம பண்ணுவாங்க... கண்ணாடிக்குப் பின்னாடி ரகசிய அறையா?’ என்று ஆச்சர்யப்படுகிறார்கள் மேட்டுப்பாளையம் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு