Published:Updated:

திருப்பூர்: கத்திமுனையில் கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர்! - பட்டப்பகலில் அதிர்ச்சி

அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன்
அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன்

சட்டமன்ற அலுவலகத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், தளி என்ற இடத்தில் மர்ம நபர்கள் கர்ணனை இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையிலுள்ள அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் இன்று கடத்தப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அன்சாரி வீதியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சட்டப்பேரவை அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளரான கர்ணன் என்பவர்  இருந்தார். இன்று அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, கத்திமுனையில் கர்ணனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தது. அதன் பிறகு அலுவலகத்துக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெள்ள நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் கடத்திச் சென்றது.

இது குறித்துத் தகவலறிந்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி.திஷா மிட்டல், டி.எஸ்.பி ரவிகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், அமைச்சரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவைக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். அதேவேளையில், உஷார்படுத்தப்பட்ட காவல்துறை திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டது.

சிசிடிவி
சிசிடிவி

இந்த நிலையில், சட்டமன்ற அலுவலகத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், தளி என்ற இடத்தில் மர்ம நபர்கள் கர்ணனை இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கர்ணனிடம் போலீஸார் விசாரிப்பார்கள் எனவும், அப்போது கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குள் புகுந்து அமைச்சரின் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு