Published:Updated:

`சொத்து தகராறில் ஆத்திரம்!’ - அமைச்சர் வீரமணியின் பீடி கம்பெனிக்குத் தீவைத்த அண்ணன் மகன்?

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

அமைச்சர் வீரமணிக்குச் சொந்தமான பீடி கம்பெனியில், அவரின் அண்ணன் மகனே தீ வைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தந்தை கே.கே.சின்னராசு, ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகோடியூரில் `தங்கவேல்’ என்ற பெயரில், பீடி கம்பெனியைத் தொடங்கினார். வீரமணிக்கு அழகிரி, ராவணன், காமராஜ், சம்பத் என்று நான்கு அண்ணன்கள் இருந்தனர். அவர்களில் ராவணனும், சம்பத்தும் 1984-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு, 1994-ம் ஆண்டு வீரமணியின் தந்தையும் காலமானார்.

 ‘பீடி’ கம்பெனி
‘பீடி’ கம்பெனி

அதையடுத்து, தந்தையின் பீடி கம்பெனியை வீரமணி மற்றும் அவரின் அண்ணன்கள் அழகிரி, காமராஜ் ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களாக இருந்து நடத்திவருகிறார்கள். காலமான இரண்டு அண்ணன்களின் மனைவி, மகன்களுக்குச் சொத்தில் சரி வரப் பங்கு தராமல் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. பீடி கம்பெனியிலும் அவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

இதனிடையே, காலமான ராவணனின் மகன் இந்தர்ஜித் லண்டனுக்குச் சென்றார். சில ஆண்டுகளாக லண்டனிலேயே வசித்துவந்த அவரை, 2016-ம் ஆண்டு அமைச்சர் வீரமணி ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். சித்தப்பா மீதான நம்பிக்கையில் இந்தியா திரும்பிய இந்தர்ஜித் சென்னையில் தங்கியுள்ளார். அடிக்கடி ஜோலார்பேட்டைக்குச் சென்று தன் தந்தைக்குச் சேர வேண்டிய சொத்துகளைக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

தீயில் எரிந்த பீடிகள்
தீயில் எரிந்த பீடிகள்

கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மீண்டும் ஜோலார்பேட்டைக்கு காரில் சென்ற இந்தர்ஜித், பெரியப்பா அழகிரியைப் பார்த்துப் பேச முயன்றுள்ளார். அவரிடம் யாரும் பேச முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்திலிருந்த இந்தர்ஜித், பெட்ரோல் பங்கிற்குச் சென்று இரண்டு பெரிய கேன்களில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு பீடி கம்பெனிக்குச் சென்றுள்ளார்.

பணியிலிருந்த தொழிலாளர்களை மிரட்டி வெளியில் அனுப்பிவிட்டு கம்பெனிக்குள் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தீ மளமளவெனப் பரவியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடிகள், இலைகள், பீடி லேபிள்கள் எரிந்து நாசமாகின. அதையடுத்து, காரில் ஏறி இந்தர்ஜித் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தீயில் எரிந்த பீடிகள்
தீயில் எரிந்த பீடிகள்

இதுகுறித்து, அமைச்சர் வீரமணியின் தரப்பிலோ அல்லது அவரின் அண்ணன்கள் தரப்பிலோ ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஆனாலும், இந்தர்ஜித்தைப் பிடித்து அழைத்துவருவதற்காக உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில், இரண்டு போலீஸார் சென்னையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீதிக்கு வந்த அமைச்சரின் குடும்ப விவகாரம், ஜோலார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு