Published:Updated:

`கட்டாயப்படுத்தினார், 3 லட்சத்துக்கு விற்றுவிட்டார்!'‍ - தாயை சிக்கவைத்த 17 வயது சிறுமி

ராம் பிரசாத்

லூதியானாவில் 17 வயது சிறுமி ஒருவர் தன் தாய் மீது கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 representation image
representation image

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் லூதியானாவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர் தன் மகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியது தெரியவந்துள்ளது. சிறுமியின் புகாரையடுத்து இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 representation image
representation image

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் ஆஷா ராணி. இவர் தன் கணவரைப் பிரிந்து 17 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆஷாவின் 17 வயது மகள், தன் தாய் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்துவதாகப் புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சிறுமி அனுப்பிய புகாரில், “ தன்னுடைய தாய் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறார். என் தாயின் தவறான உறவால் கடந்த 3 வருடங்களுக்கு முன் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னரும் என் தாயின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு ஆண்களுடன் தொடர்ந்து பழகிவந்தார். ராம் லூபையா என்ற நபருடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. என்னையும் பல்வேறு ஆண்களுடன் பழக வற்புறுத்தினார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் லூபையாவிடம் ரூபாய் 3 லட்சம் பெற்றுக்கொண்டு என்னை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். லூபையா என்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தினார்.

இதையடுத்து நான் அங்கிருந்து வெளியேறி என் தாய் வீட்டுக்கு வந்தேன். என்னை அடித்து உதைத்து மீண்டும் அங்கேயே கொண்டு போய்விட்டார். தாய் மற்றும் கணவர் இருவரும் என்னைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக் கட்டாயப்படுத்திவந்தனர்” என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள். ``சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி ஜலந்தர் பகுதியில் வசித்து வருவதால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அந்தச் சரக காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரனை மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

 representation image
representation image

லூபையாவின் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, தன் தந்தையின் நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவரிடம் சொல்லிப் புலம்பியுள்ளார். இதையடுத்து அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.