Published:Updated:

`இந்த வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை!' - போலீஸ் டி.ஐ.ஜி டார்ச்சரால் விபரீத முடிவெடுத்த சிறுமி?

மும்பையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி தற்கொலை கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமான சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Representation Image
Representation Image

மும்பையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை. `நான் வாழ விரும்பவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் சிறுமி தன்னுடைய அறையில் படித்துக்கொண்டிருப்பதை அவரின் சகோதரர் பார்த்துள்ளார்.

காலை 3.30 மணியளவில் சிறுமியின் தந்தை எழுந்து பார்த்தபோது அவரைக் காணவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். செக்யூரிட்டிகளிடம் விசாரித்தபோது, `தெரியவில்லை' என்ற பதிலே கிடைத்துள்ளது. இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது அறையில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

Representation Image
Representation Image

அந்தக் கடிதத்தில், `நீங்கள் யாரும் என்னைத் தேட வேண்டாம். நான் ரயில் முன்பு விழுவதற்காக வந்துள்ளேன். இந்த வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை. நான் இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய தற்கொலைக்கு அந்த டி.ஐ.ஜிதான் காரணம்’ என எழுதி வைத்துள்ளார்.

`கொலை.. தற்கொலை; கழுத்து  அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்!’- கேரளாவில் நடந்த துயரச் சம்பவம்

மும்பையைச் சேர்ந்த சிறுமியின் குடும்பத்துக்கும் டி.ஜி.ஜி நிஷிகாந்த் (Motor Transport) என்பவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் சிறுமி தன் 17-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.

இந்த விழாவில் பங்கேற்க டி.ஐ.ஜி-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் அவர் தன் மனைவியுடன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுள்ளார். சிறுமியின் தந்தையிடம், `மது வேண்டும்' எனக் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் அவரும் வாங்கித் தந்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அந்த அதிகாரி சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை டி.ஐ.ஜி-யின் மனைவிக்கும் அனுப்பியுள்ளனர். இது நடந்து ஒருவாரம் கழித்து சிறுமியை அழைத்த டி.ஐ.ஜி-யின் குடும்பத்தினர், `காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உன் குடும்பத்தினரை உள்ளே தள்ளிவிடுவோம்' என மிரட்டியுள்ளனர்.

Representation Image
Representation Image

இதையடுத்து டி.ஐ.ஜி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த வீடியோவின் அடிப்படையில் டி.ஐ.ஜி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, டி.ஐ.ஜி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நிஷிகாந்த் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

`தெலங்கானாவில் மாயமான இளம்பெண்; துப்புதுலங்காமல் தவிக்கும் தனிப்படை!’- 9 நாள்களாக கலங்கும் உறவுகள்

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், சிறுமி கடுமையான மனவேதனையில் இருந்ததாக அவரின் சகோதரர் புகாரில் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் இரண்டு நபர்கள் சிறுமியின் சகோதரனையும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள சிறுமியின் தந்தை, ``என் மகளுக்குத் தேர்வு நடந்து வருவதால் இரவு படித்துக்கொண்டிருந்தார். காலை 3.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது என் மகளைக் காணவில்லை. இதையடுத்து எங்கள் வீடு அமைந்துள்ள தலோஜ் பகுதியில் தேடினோம். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் ஒரு கடிதம் இருந்தது.

டிஜிஜி நிஷிகாந்த்
டிஜிஜி நிஷிகாந்த்

ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் எனக் கடிதத்தில் எழுதியிருந்ததால் நாங்கள் ரயில் நிலையங்களுக்குச் சென்று பார்த்தோம். ஆனால் அங்கு அவள் இல்லை. காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தேன். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது ரயில்நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் என் மகள் தனியே நடந்து செல்வது பதிவாகியிருந்தது” என்றார்.

சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி பயன்படுத்திய செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுமியைத் தேடும் படலம் நடந்து வருகிறது.