Published:Updated:

வேலூர்: 2 இளைஞர்களைக் கொன்று பாலாற்றில் வீசிய கும்பல்?! -மாயமான வழக்கில் திடீர் திருப்பம்

வேலூரில், மாயமானதாகக் கூறப்பட்ட இரண்டு இளைஞர்கள் கொலைச் செய்யப்பட்டு, உடல்கள் கல்லால் கட்டி பாலாற்றில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேசகுமார் (24), விஜய் (24). நண்பர்களான இருவரும் கடந்த 10-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இருவரும் மாயமானதாக வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேசகுமார், விஜய் இருவரும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கல்லால் கட்டி பாலாற்றில் வீசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக, வேலூர் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலா, ஆகாஷ், சரத்குமார் ஆகிய மூன்று இளைஞர்களையும் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

நேசகுமார்
நேசகுமார்

மூன்று பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களிடம் விசாரணையை தொடங்க முடியாமல் போலீஸார் திணறியிருக்கிறார்கள். பின்னர் சுட சுட டீ, காபி கொடுத்து போதையை தெளிய வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். போதை தெளிந்த பின் மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், ‘‘கொலைச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர்களும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்களும் குற்றப் பின்னணியுடையவர்கள்தான். கொலைச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வண்டறந்தாங்கலைச் சேர்ந்த நேசகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவருக்கும் பகை இருந்திருக்கிறது.

இருவரும் ஒருவரை ஒருவர் கொலைச் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆள்கடத்தல் வழக்கில் கௌதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது, சிறையில் இருக்கும் கௌதம் வெளியில் வந்தால் கொலைச் செய்யப் போவதாக நேசகுமார் சவால் விடுத்து வந்துள்ளார். இந்த தகவல் கௌதமின் நண்பரான விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாவுக்குத் தெரியவந்துள்ளது. ‘பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றுகூறி நேசகுமாரை விருதம்பட்டு பாலாற்றங்கரையிலிருக்கும் சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்திருக்கிறார் பாலா. நேசகுமாரும் தனது நண்பரான விஜய்யை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

விஜய்
விஜய்

அப்போது, எதிர் தரப்பில் பாலா மற்றும் அவரின் நண்பர்கள் மேலும் ஐந்துப் பேர் இருந்திருக்கிறார்கள். நேசகுமார், அவரின் நண்பர் விஜய் இருவரையும் உட்கார வைத்து மது ஊற்றிக்கொடுத்துள்ளனர். எதிர் தரப்பினர் 6 பேரும் மது குடித்துள்ளனர். பின்னர், கஞ்சா புகைத்துள்ளனர். போதை தலைக்கேறியவுடன் 6 பேரும் சேர்ந்து விஜய், நேசகுமாரை கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியாலும் வெட்டி கொலைச் செய்துள்ளனர். பின்னர், அருகிலிருக்கும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்து உடல்களை எரிக்க முயற்சித்துள்ளனர். உடல்கள் முழுவதுமாக எரியாததால், கற்களை கட்டி பாலாற்றில் வீசியிருக்கிறார்கள்’’ என்று பிடிபட்ட மூன்று பேரும் சொன்னதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பாலாற்றில் விஜய், நேசகுமார் இருவரின் உடல்களையும் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பிடிபட்ட மூன்று பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று தடயங்களைச் சேகரித்துவருகிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூன்று இளைஞர்களைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு