நீலகிரி: மாயமான சிறுமி; 26 நாள்களுக்குப்பின் கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்! - கொலை வழக்காக மாற்றம்

தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கரடி பங்களா அருகில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதை தனிப்படையினர் கண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் கிரேக்மோர் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், சுமன் குமாரி தம்பதியரின் 8 வயது மகள் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மாலை மாயமானார். பதறிய பெற்றோர் அருகில் உள்ள கொலக்கம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் கொலக்கம்பை காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மற்றும் அதிரடிப்படையினர் பல துறைகள் இணைந்து இரவு பகலாக தேடி வந்தனர்.
சிறுமியை கண்டறிவதில் பல கட்ட விசாரணை மேற்கொண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் காவல்துறையினர் திணறி வந்தனர். மேலும் 9 தனிப்படை அமைத்து தேடுதலை மேலும் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இதே பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஷோக் பகத்தின் உடல் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் அஷோக் பகத்தின் மனைவி சுமதி வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதன் அருகிலேயே அஷோக்கின் மகன் அபய் மற்றும் மகள் ரேஷ்மாவும் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலாமாக கிடந்த சோக நிகழ்வு ஒட்டுமொத்த எஸ்டேட்டையும் அச்சத்தில் உறையச் செய்ததது. இந்த இரண்டு நிதழ்வுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கிரேக்மோர் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கரடி பங்களா அருகில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதை தனிப்படையினர் கண்டனர்.

அழுகிய நிலையில் மிதந்த உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். காணாமல் போன சிறுமியின் உடலாக இருக்கலாம் என பெற்றோரை அழைத்து காண்பித்தனர். பெற்றோர் பார்வையிட்டதில், இறந்த நிலையில் காணப்பட்டது தங்கள் மகள் தான் என உறுதி செய்தனர். 26 நாள்களுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், ``குழந்தையின் பெற்றோர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் புதர்மண்டிய பகுதி இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தில் தேடும் பணி மேற்கொண்ட போது அங்கு பயன்பாடற்ற கிணறு ஒன்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கிணற்றை ஆய்வு செய்த போது அங்கு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் குழந்தை காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. குன்னூர் டி.எஸ்.பி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு விவரமும் தெரியவரும். குழந்தையின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.