Published:Updated:

`திருவிழாக் கொண்டாட்டம்; திடீரென மாயமான சிறுமி!' - ஒடிசா கிராமத்தை அதிரவைத்த கொலை

ஒடிசாவில் 16-வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Representation image
Representation image

ஒடிசா மாநிலம் நபரங்கபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று திருவிழா நடந்தது. கிராம மக்கள் அனைவரும் ஊர் திருவிழாவில் கவனம் செலுத்தி வந்தனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி இரவு 8 மணியளவில் காணவில்லை. முதலில் திருவிழாவைப் பார்க்க சென்றிருப்பாள் எனக் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் கிராமத்தில் சிறுமியைத் தேடிய போது அவர் காணவில்லை. 16 வயதான சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் கூலி வேலை செய்து வருகின்றனர். சில காரணங்களால் அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை.

Representation image
Representation image

சிறுமியை இரவு முழுவதும் தேடியுள்ளார்கள். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் நேற்று காலை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்தன. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

`பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணுக்குத் தீவைப்பு!' - உன்னாவ் அருகே மேலும் ஒரு அதிர்ச்சி

கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் அந்தப்பகுதிக்கு விரைந்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்ற சென்ற காவல்துறையினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் சிறுமியின் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக போலீஸாருக்கு கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Representation image
Representation image

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``சிறுமி நேற்று இரவு குடும்பத்தினருடன் படுத்து உறங்கியுள்ளார். இரவு 8 மணியளவில் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியில் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இரவு முழுவதும் குடும்பத்தினர் சிறுமியைத் தேடியுள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் இன்று காலை கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சிறுமியின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கூறியுள்ளனர். சிறுமியின் உடலில் நிறைய காயங்கள் உள்ளன. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆண்கள் அணியும் இரண்டு பேன்ட் இருந்தது. இதன்காரணமாகவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என உறுதியாகத் தெரியவில்லை.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும். சிறுமியை வீட்டுக்கு அருகிலிருந்து இழுத்துச் சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன. இந்தச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.