Published:Updated:

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?

செல்வன் கொலை வழகுக்காகப் போராட்டம்
செல்வன் கொலை வழகுக்காகப் போராட்டம்

தூத்துக்குடியில், தட்டர்மடம் காவல் ஆய்வாளரைக் கைதுசெய்ய வலியுறுத்தி ஊர் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து பேசவந்தவர்களைத் திருப்பி அனுப்பியதால் அவரது கார் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய தம்பிகள் சிலுவைதாஸ், துரைராஜ் ஆகியோருக்குச் சொந்தமான, காந்திநகர் அருகிலுள்ள அவர்களின் இடத்தை உசரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த தெற்கு மாவட்ட அ.தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேல் விலைக்கு வாங்கியிருக்கிறார். தனிஸ்லாஸுக்குச் சொந்தமான ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் திருமணவேல் ஆக்கிரமித்து வேலிவைத்து அடைத்திருக்கிறார்.

உயிரிழந்த செல்வன்
உயிரிழந்த செல்வன்

இது தொடர்பாக தனிஸ்லாஸின் மகன்கள் பீட்டர்ராஜா, பங்காருராஜன், செல்வன் ஆகியோருக்கும் திருமணவேல் தரப்புக்கும் கடந்த இரண்டு வருடங்களாகப் பகை இருந்துவந்திருக்கிறது. இதில் அந்த நிலத்தில் திருமணவேல் நாட்டுவெடிகுண்டு வீசியதாக அவர்மீது தனிஸ்லாஸின் மூன்று மகன்களும் புகாரளித்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் புகாரை தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் வாங்காமல், பதிலுக்கு மூவர் மீதும் திருமணவேல் அளித்த பொய்ப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டார்களாம்.

கடந்த ஜனவரி 19-ம் தேதியும் இந்தப் பிரச்னையால் பங்காருராஜனை திருமணவேலின் ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இதில், பங்காருராஜன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதில், ஹரிகிருஷ்ணன், அவரை அழைத்து வந்து ஸ்டேஷனில்வைத்து அடித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

போராட்டத்தில் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன்
போராட்டத்தில் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், சகோதரர்கள் மூவர் மீதிருக்கும் வழக்கு ஒன்றின் ஜாமீன் மனு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியிடம் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்ததாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது. புகாரை அஃபிடவிட்டாகத் தாக்கல் செய்யக் கூறினார் நீதிபதி. அன்று மதியம் சொக்கன்குடியிருப்பிலிருந்து சாத்தான்குளம் சென்றுகொண்டிருந்த செல்வன், சிலரால் காரில் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுக் கிடந்தார்.

சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தார். இதையடுத்து செல்வனைத் தாக்கிய திருமணவேல், அவரின் ஆதரவாளர்கள், கொலைக்குத் தூண்டிய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் எனக்கோரி செல்வனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், `இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம்’ என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட கார்
உடைக்கப்பட்ட கார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தநிலையில் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஊர்மக்களுடன் இணைந்து நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது சிலர் செல்வனின் குடும்பத்தினரை அழைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர்.

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி  உத்தரவு! #NowAtVikatan

அப்போது, மைக்கைப் பிடித்த அனிதா, ``நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தர் கொலை செய்யப்பட்டிருக்கார். அவரது இறப்புக்கு நீதி கிடைக்கணும். அதற்காக ஒன்றிணைந்து போராடுவோம். அதை விட்டுட்டு பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டாம்” என்றார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்கள் கிளம்பிச் சென்றனர். அதன் பிறகு நள்ளிரவில் தண்டுபத்து கிராமத்திலுள்ள அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடியை முகமுடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இது தொடர்பாக தண்டுபத்தைச் சேர்ந்த செல்வநாதன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜின்னா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். `பஞ்சாயத்து பேசவந்தவர்களைத் திருப்பியனுப்பிய ஆத்திரத்திரத்தில் காரை அடித்து நொறுக்கியிருக்கலாம்’ எனச் சொல்லப்படுகிறது.

உடைக்கப்பட்ட காரை பார்வையிட்ட எஸ்.பி
உடைக்கப்பட்ட காரை பார்வையிட்ட எஸ்.பி

நள்ளிரவில் நடந்த இந்த கார் உடைப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் திருமணவேல், அவரின் சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திருமணவேல் நீக்கப்பட்டார். அதேபோல, ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க நிர்வாகி திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனைக் கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்களின் கோரிக்கை நிறைவேறியதால், செல்வனின் உடலைப் பெறாமல் நான்கு நாள்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.

`செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அவரது நிலப் பிரச்னை தொடர்பான வழக்குகள் சுமுகமாக முடித்துவைக்கப்படும்' என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடுத்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொள்வதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர் மேலும், செல்வனின் உடலை பெற்றுக்கொள்வதற்கும் உறவினர்கள் சம்மதித்துள்ளனர்.

நெல்லை: `கட்டப் பஞ்சாயத்து.. அடித்துக் கொலை!’ - இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு
அடுத்த கட்டுரைக்கு