Published:Updated:

`50 ஆயிரம் முன்பணம், 7 லட்சம் ரூபாய் வீடு!' - நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஊட்டி

ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் வீடு கட்டித்தர 50,000 ரூபாய் முன்பணம் கேட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் மோசடி நடந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் சங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `ஊட்டி காந்தள் கிராமத்தில் பெய்த கனமழையினால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகவா லாரன்ஸ் பெயரில் ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டித்தரப்படுவதாகவும் அதற்கு முன்பணம் 50,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் பிரசாரம் செய்து மக்களை நம்ப வைத்துள்ளனர்.

அதை நம்பி சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. எனவே, பொய்த் தகவலைக் கூறி பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் மோசடி
நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் மோசடி

இதுகுறித்து சங்கரிடம் பேசினோம். ``கடந்த 15 நாள்களுக்கு முன்தான் எங்களுக்கு இந்தத் தகவல் கிடைத்தது. உடனடியாக விசாரித்தபோது 3 பேர் பணம் செலுத்திய தகவல் தெரிந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, ராகவா லாரன்ஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் மூலமாகத்தான் பணம் செலுத்தியுள்ளனர். அந்த ஆதாரங்களையும் சேகரித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். வாட்ஸ்அப் மூலம் அந்தக் கும்பல் சேட்டிங் செய்து பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லியிருக்கிறது. அந்த ஆதாரத்தையும் கொடுத்துள்ளோம்" என்றவர்,

``இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எஸ்.பி.ஐ வங்கியின் நெற்குன்றம் கிளையில் விஜயலட்சுமி என்பவரின் வங்கிக் கணக்கில்தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மோசடி செய்தது யார் என்பதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

சங்கர்
சங்கர்

இதுதொடர்பான ஆதாரங்களை ராகவா லாரன்ஸிடம் காட்டியபோது, ரொம்பவே வருத்தப்பட்டார். ஏற்கெனவே அறக்கட்டளைக்கும் இதுதொடர்பான புகார்கள் வந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோன்ற மோசடி நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் போலீஸில் புகார் கொடுத்துள்ளாம்" என்றார் கொதிப்புடன்.