சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

கோடி கோடியாய் மோசடி... தலைமறைவான நடிகர்... நிஜ ‘சதுரங்க வேட்டை’யின் பகீர் பின்னணி!

‘ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனீஸ்.’
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனீஸ்.’

‘ஹிஜாவ் கம்பெனியில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம்தோறும் 15,000 ரூபாய் வட்டி கொடுக்கிறார்கள். நான்கூட 5 லட்சம் ரூபாய் போட்டிருக்கிறேன்.

வேலூர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி பாணியில், சென்னையில் பல நூறு கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டு தலைமறைவான தந்தை, மகனின் தில்லாலங்கடி வேலைகள் பகீர் கிளப்புகின்றன!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறது ‘ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனீஸ்.’ வெளிநாட்டு எண்ணெய் கம்பெனிகளில் முதலீடு, இயற்கை விவசாயம், ஆர்கானிக் பொருள் விற்பனை எனப் பல துறைகளிலும் கால்பதித்திருந்த இந்த நிறுவனத்தின் தலைவராக சௌந்தர்ராஜனும், நிர்வாக இயக்குநராக அவரின் மகன் அலெக்ஸாண்டரும் பொறுப்பு வகித்துவந்துள்ளனர். இந்த நிலையில், ஹிஜாவ் நிறுவனம் கோடிகளில் மோசடி செய்துவிட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர்

இது தொடர்பாக சென்னை அசோக்நகரிலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தவர்களில் ஒருவரான ராணி என்பவரிடம் பேசினோம். ``கடந்த மே மாதம் என்னோடு படித்த தோழி ஒருவர், ‘ஹிஜாவ் கம்பெனியில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம்தோறும் 15,000 ரூபாய் வட்டி கொடுக்கிறார்கள். நான்கூட 5 லட்சம் ரூபாய் போட்டிருக்கிறேன். அதற்கு மாதம்தோறும் 75,000 ரூபாய் வட்டியாகக் கொடுக்கிறார்கள். நீயும் டெபாசிட் செய்’ என்று கூறினார். மேலும் புராஜெக்ட் மேனேஜர் என பூந்தமல்லி வேலப்பன்சாவடியைச் சேர்ந்த முத்துகண்ணன் என்பவரின் செல்போன் நம்பரையும் கொடுத்தார். உடனே நானும் அவரிடம் 3 லட்சம் ரூபாயைக் கொடுத்தேன். அதன் பிறகு ஜூன், ஜூலை இரண்டு மாதங்கள் வட்டியாக 90,000 ரூபாயை அவர் என்னுடைய வீட்டுக்கே வந்து கொடுத்தார். அதனால் எனக்குத் தெரிந்தவர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தேன். அதை நம்பி எனக்குத் தெரிந்த நான்கு பேர் பணத்தை டெபாசிட் செய்தனர். அந்த வகையில், என் மூலமாக 11 லட்சம் ரூபாய், என் தோழியின் மூலம் 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 26 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு இப்போது ஏமாந்து நிற்கிறோம். பணத்தைத் திரும்பக் கேட்டால், கம்பெனி நஷ்டம் என்று சொல்வதோடு ‘போலீஸில் புகார் கொடுத்தீர்களென்றால் அவ்வளவுதான்’ என மிரட்டுகிறார்கள்” என்றார் கண்ணீரோடு.

சௌந்தர்ராஜன்
சௌந்தர்ராஜன்

இதையடுத்து ஹிஜாவ் கம்பெனியில் புராஜெக்ட் மேனேஜர்களாகப் பணியாற்றிய சிலரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ``ஹிஜாவ் குழுமத்தின் சேர்மன் சௌந்தர்ராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் ஆகியோரின் கீழ் 21 போர்டு மெம்பர்கள், துணைத் தலைவர்கள், உதவித் தலைவர்கள், சீனியர் - தலைமை புராஜெக்ட் மேனேஜர்கள், மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர்கள் எனத் தனித் தனி டீமே செயல்பட்டுவந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் எங்களைப் போன்ற புராஜெக்ட் மேனேஜர்கள் இருந்தனர். நாங்கள்தான் பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து, சீனியர் - தலைமை புராஜெக்ட் மேனேஜர்களிடம் கொடுப்போம். அவர்கள் தங்களுக்கு மேலுள்ள டீம் லீடர்களிடம் பணத்தைக் கொடுப்பார்கள். மற்றபடி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் சேர்மன், நிர்வாக இயக்குநருக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.

ஒவ்வொரு மாதமும் புராஜெக்ட் மேனேஜர்கள் முதல் போர்டு மெம்பர்கள் வரை அனைவரிடமும் நட்சத்திர ஹோட்டல்களில் சௌந்தர்ராஜனும் அலெக்ஸாண்டரும் மீட்டிங் நடத்துவார்கள். அப்போது ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனி, ரியல் எஸ்டேட்டில் ஆரம்பித்து ஆயில், ஆர்கானிக் பொருள் விற்பனை எனப் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதாகச் சொல்வார் அலெக்ஸாண்டர். முதலீட்டாளர்களுக்கும் ஆரம்பத்தில் முதலீடு செய்த பணத்துக்குச் சரியாக வட்டி கொடுத்து வந்தனர். அதனால் எங்களுக்கும் எந்தச் சிக்கலும் இல்லாமலிருந்தது. ஆனால், இப்போது ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த கம்பெனியில் முதலீடு செய்த பல நூறு கோடி ரூபாயுடன் சௌந்தர்ராஜனும் அலெக்ஸாண்டரும் எஸ்கேப் ஆகிவிட்டனர். பணத்தை முதலீடு செய்தவர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் தலையீடு இருப்பதால், போலீஸில் புகாரளிக்கக்கூட எங்களுக்கு பயமாக இருக்கிறது” என்றனர்.

கோடி கோடியாய் மோசடி... தலைமறைவான நடிகர்... நிஜ ‘சதுரங்க வேட்டை’யின் பகீர் பின்னணி!

இதையடுத்து, ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனீஸின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் விளக்கம் கேட்பதற்காக, 25-க்கும் மேற்பட்ட எண்களுக்குப் பல்வேறு வகைகளில் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

எனவே, பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி ஜெயசந்திரனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ``ஹிஜாவ் குரூப் ஆஃப் கம்பெனீஸ் தொடர்பாக, தொடர்ந்து புகார் வந்துகொண்டிருப்பதால், இதுகுறித்து விசாரிக்க இரண்டு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆயிரம் சம்பவங்கள் பார்த்தாச்சு... இன்னுமா... அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்காதீர்கள் மக்களே!

யார் இந்த அலெக்ஸாண்டர்?

அலெக்ஸாண்டரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரியபட்டி கிராமம். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘வெங்காயம்’ தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அலெக்ஸாண்டர். மேலும் பிரபலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்!