Published:Updated:

`குழந்தைகளை குரங்கு தூக்கிச் செல்ல வாய்ப்பில்லை!' - வனத்துறை அதிகாரி தகவலால் வேறு கோணத்தில் விசாரணை

குழந்தையைப் பறிகொடுத்த தாய் கதறல்
குழந்தையைப் பறிகொடுத்த தாய் கதறல் ( ம.அரவிந்த் )

``நம் பகுதியிலுள்ள குரங்குக் குட்டிகளின் எடை சுமார் 200 முதல் 500 கிராம்தான் இருக்கும். குட்டிகளைக் குரங்கு தூக்கிக்கொண்டு செல்லும்போது, குட்டியைத் தாய்க் குரங்கு பிடித்திருக்காது. குட்டியே தாயை இறுக்கமாகப் பிடித்திருக்கும்” - வனத்துறை அதிகாரி

தஞ்சாவூரில், இரட்டைக் குழந்தைகளை, குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் கூண்டு அமைத்து குரங்குகளைப் பிடித்துவருகின்றனர். மேலும் குரங்கு, குழந்தையைத் தூக்கிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிடிபட்ட குரங்குகள்
பிடிபட்ட குரங்குகள்

தஞ்சாவூர், மேல அலங்கம், கோட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜா. பெயின்ட்டர் வேலை செய்துவருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்தநிலையில் வீட்டுக்குள் குழந்தைகளைப் படுக்கவைதுவிட்டு புவனேஸ்வரி வெளியில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது கடந்த 13 -ம் தேதி மதியம் அளவில் குரங்குகள் கூட்டமாக அந்தப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கூரையின் ஓட்டைப் பிரித்து இரண்டு குரங்குகள் வீட்டுக்குள் வந்ததுடன், தனித் தனியாக ஒவ்வொரு குழந்தையைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

குரங்கு பிடிக்கும் பணியில்...
குரங்கு பிடிக்கும் பணியில்...

பின்னர் குரங்குகள் ஒரு குழந்தையை வீட்டின் மேற்கூரையிலும், மற்றொரு குழந்தையை அருகேயுள்ள அகழியிலும் வீசிச் சென்றதில், அகழியில் வீசப்பட்டஒரு குழந்தை உயிரிழந்தது. மற்றொரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது. பச்சிளம் குழந்தையின் இறப்பைத் தாங்க முடியாத குழந்தையின் தாய் கதறியது இன்னும் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியது.

இரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள்! - தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்

இது தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், கலெக்டர் கோவிந்தராவ் குரங்களைப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கூண்டுகள்வைத்து, குரங்குகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுப்பட்டனர்.

உயிரிழந்த குழந்தை
உயிரிழந்த குழந்தை

இதற்காக அமைக்கப்பட்ட கூண்டுகளில் 20 குரங்குகள் சிக்கின. அவற்றை பச்சமலைக் காட்டுப்பகுதியில் விடவிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்தநிலையில், குழந்தைகளை, குரங்குகள் தூக்கிச் செல்ல வாய்ப்பில்லை, வேறு ஏதோ சம்பவம் நடந்திருப்பதாகக் கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மாவட்ட வனத்தறை அலுலவர் இளையராஜா கூறியதாவது, ``குழந்தைகளைக் குரங்கு தூக்கிச் சென்ற விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்திருக்கிறேன். அதன்படி, நம் பகுதியிலுள்ள குரங்குக் குட்டிகளின் எடை சுமார் 200 முதல் 500 கிராம்தான் இருக்கும்.

குரங்கு வந்த பகுதி
குரங்கு வந்த பகுதி

குட்டிகளைக் குரங்கு தூக்கிக்கொண்டு செல்லும்போது, குட்டியை தாய்க் குரங்கு பிடித்திருக்காது. குட்டியே தாயை இறுக்கமாகப் பிடித்திருக்கும். இந்தநிலையில், குரங்கள் தூக்கிச் சென்றதாக கூறப்படும் குழந்தைகளின் எடை 2.5 கிலோ இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், குரங்கள் மேற்கூரை ஓட்டின் வழியாக உள்ளே இறங்கி குழந்தைகளை தூக்கி கொண்டு 3 அடி உயரமுள்ள சுவர் வழியாக ஏறி செல்ல வாய்ப்பு இல்லை.

அப்படி குரங்குகள்தான் குழந்தையைத் தூக்கிச் சென்றது என்றால், குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள்கூட இல்லை என்பதை டாக்டர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இறந்த குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக சீனியர்களிடம் பேசியதில், இது அரிதான விஷயம் என தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக மேலும் விசாரிக்கப்படும்” என்றார்.

பிடிபட்ட குரங்கு
பிடிபட்ட குரங்கு

இது குறித்து போலீஸார் ஒருவர் கூறியதாவது, ``குழந்தை விவகாரத்தில் முதற்கட்டமாக, குரங்குகள் குழந்தைகளைத் தூக்கிச் சென்றதாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வனத்துறையினர் குரங்கு தூக்கிச் செல்ல வாயிப்பில்லை எனக் கூறியிருப்பதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருப்பதால் வேறு கோணத்தில் விவசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு