Published:Updated:

மோன்சனின் மோசடி லீலைகள்!

மோன்சன் மாவுங்கல்
பிரீமியம் ஸ்டோரி
மோன்சன் மாவுங்கல்

- யூதாஸின் வெள்ளி நாணயம்... விநாயகர் எழுதிய ஓலைச்சுவடி... புரூனே சுல்தானின் கிரீடம்...

மோன்சனின் மோசடி லீலைகள்!

- யூதாஸின் வெள்ளி நாணயம்... விநாயகர் எழுதிய ஓலைச்சுவடி... புரூனே சுல்தானின் கிரீடம்...

Published:Updated:
மோன்சன் மாவுங்கல்
பிரீமியம் ஸ்டோரி
மோன்சன் மாவுங்கல்

‘‘ஆதாம் கடித்த ஆப்பிள் மட்டும்தான் என்னிடம் இல்லை. மற்றவை அனைத்தும் என்னிடம் கிடைக்கும்!’’ - டயலாக்கே கிறுகிறுக்கவைக்கிறது அல்லவா! பழங்காலப் பொருள்கள் விற்பனையாளர் என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்து, கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸால் கைதுசெய்யப்பட்ட மோன்சன் மாவுங்கல் அடிக்கடி கூறும் வாசகம் இது. ‘‘ஒருத்தரை ஏமாத்தணும்னா அவருக்கு ஆசையைத் தூண்டணும்’’ என்ற வசனத்தை அடிப்படையாகக்கொண்ட ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தைவிட பல மடங்கு விறுவிறுப்பானது, மோன்சன் மாவுங்கல்லின் மோசடிகள்.

ஏசுவின் முகம் துடைத்த துணி!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலாவைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் தன்னை ஸ்கின் டாக்டர், பழங்காலப் பொருள்கள் சேகரிப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், தெலுங்கு சினிமா நடிகர் என்றெல்லாம் பெருமையோடு அறிமுகப்படுத்திக்கொண்டு கடந்த 24 ஆண்டுகளாகப் பலரையும் ஏமாற்றி வந்திருக்கிறார். மழைக்குக்கூட கல்லூரிப் பக்கம் ஒதுங்காத மோன்சன் மாவுங்கல், தன்னை ஸ்கின் டாக்டர் என்று கூறிக்கொண்டு வி.ஐ.பி-கள் பலருக்கும் சிகிச்சை அளித்திருக்கிறார். ஓரிரு தெலுங்குப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அவருக்கு சேர்த்தலாவில் சொந்த வீடு உள்ளது. கொச்சியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசிப்பதுடன், அதில் ஒரு பகுதியை மியூசியமாக மாற்றியிருக்கிறார். உலகெங்கும் சுற்றினாலும் இப்படியோர் அதிசய டுபாக்கூர் மியூசியத்தை நீங்கள் பார்க்க முடியாது. அந்த மியூசியத்தில் திப்பு சுல்தானின் சிம்மாசனம், ஏசு கிறிஸ்துவைச் சிலுவையிலிருந்து இறக்கியவுடன் அவரின் முகத்தைத் துடைத்த வெள்ளைத் துணி, ஏசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸுக்குக் கொடுக்கப்பட்ட 30 வெள்ளிக்காசுகளில் இரண்டு வெள்ளிக் காசுகள், மோசேவின் செங்கோல், கிருஷ்ணன் வெண்ணெய் திருடாமல் இருக்க யசோதை பூட்டிவைத்த மரத்தால் ஆன வெண்ணெய் பானை, பந்தள ராஜ குடும்பத்தின் செப்பு ஏடுகள்... எல்லாவற்றுக்கும் மேலாக வியாசர் முனிவர் சொல்லச் சொல்ல விநாயகக் கடவுள் கைப்பட எழுதிய மகாபாரத ஓலைச்சுவடிகள் என்றெல்லாம் சொல்லி அந்தப் பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார். இது பற்றி தனது இணையதளத்திலும், யூடியூப் வீடியோக்களிலும் விவரித்திருக்கிறார் மோன்சன் மாவுங்கல். அவரின் மியூசியத்தைக் காண முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா, ஏ.டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் என்று பெரிய வி.ஐ.பி பட்டாளமே சென்று வந்திருப்பதுதான் விநோதத்திலும் விநோதம்!

மோன்சனின் மோசடி லீலைகள்!

போலி வெளிநாட்டு வங்கிக் கணக்கு!

இவ்வளவு ‘அரிய’ பொருள்களை வைத்திருப் பவர் சும்மா இருப்பாரா... ‘‘புரூனே சுல்தானின் கிரீடத்தை விற்பனை செய்ததில் 70,000 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது. அதற்கு வரி செலுத்தப் பணம் கொடுத்தால், வட்டியில்லாமல் நூறு கோடி ரூபாய் லோன் வாங்கித்தருகிறேன்’’ என்று வாய்ஜாலம் காட்டியே சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவரிடம் 6 கோடியே 27 லட்சம் ரூபாய் கைமாற்றாக வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால் ஷாஜி கொடுத்த புகாரின் பேரில் கேரள க்ரைம் பிராஞ்ச் போலீஸார் சமீபத்தில் மோன்சன் மாவுங்கல்லைக் கைதுசெய்தார்கள். கைதுக்குப் பிறகுதான் மோன்சன் செய்த மோசடிகளின் பிரமாண்டம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ‘‘வெளிநாடுகளில் வைர வியாபாரம் செய்ததில் சர்வதேச வங்கியான ஹெச்.எஸ்.பி.சி வங்கிக் கணக்கில் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. அந்தப் பணத்தை ரிலீஸ் செய்ய பணம் தேவை’’ என்று அனூப் அஹமது என்பவரிடம் 10 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்திருக்கிறார். மோசடி செய்வதற்காக ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் போலி ஆதாரங்களையும் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

மோன்சனின் மோசடி லீலைகள்!

ஏமாந்த காங்கிரஸ் தலைவர்!

இந்த விவகாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, ‘‘மோன்சனின் மியூசியத்திலுள்ள சிலைகள் பழைமையானவை அல்ல. அவை நான் செய்துகொடுத்தவை’’ என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிற்பி சுரேஷ் கூறியிருக்கிறார். க்ரைம் பிராஞ்ச் போலீஸில் புகார் அளித்துள்ள சுரேஷ், ‘‘அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், எனது சிற்பக்கூட விளம்பரத்தைப் பார்த்து ‘மோன்சன் மாவுங்கல்லைப் போய்ப் பார்த்தால் வியாபாரம் நடக்கும்’ என்று கூறியதால், 2018 டிசம்பரில் மோன்சன் மாவுங்கல்லைச் சந்தித்தேன். ‘ஒரு மாதத்தில் பணம் தருகிறேன்’ என்று சொல்லி, நான் ஏற்கெனவே செய்துவைத்திருந்த ஆறு மரச்சிற்பங்களை வாங்கினார். அவற்றில் விஷ்ணுவின் விஸ்வரூப தரிசன சிற்பமும் ஒன்று. ஆனால், பணம் தராமல் ஏமாற்றிவிட்டார். 70 லட்சம் ரூபாய் அவர் தரவேண்டியிருக்கிறது. பணம் இல்லையென்றால், சிற்பங்களைத் திரும்பத் தர வேண்டும் என்று புகாரில் கூறியிருக்கிறேன்’’ என்றார்.

மோன்சன் மாவுங்கல், டாக்டர் என்று சொல்லி பல வி.ஐ.பி-க்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனும் அவர்களில் ஒருவர். இது குறித்து விளக்கமளித்த கே.சுதாகரன், ‘‘நான் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக மோன்சனிடம் சிகிச்சைக்குச் சென்றிருந்தேன். ஒரு வாரம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால், வேறு மருத்துவரிடம் சென்றுவிட்டேன். மற்றபடி வேறு எந்த டீலும் அவருடன் இல்லை. மோன்சன் மாவுங்கல் போலி என டி.ஜி.பி-க்கே சந்தேகம் ஏற்படவில்லை. எனக்கு எப்படிச் சந்தேகம் வரும்?’’ என்று அப்பாவியாகக் கேட்கிறார்.

சிக்கியது எப்படி?

வெளிநாடுவாழ் மலையாளிகள் சங்கப் பொறுப்பிலும் மோன்சன் மாவுங்கல் இருந்திருக்கிறார். அதில் முக்கியப் பொறுப்பிலிருந்த அனிதா என்பவர்தான் மோன்சனை டி.ஜி.பி-யாக இருந்த லோக்நாத் பெகராவுக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். ஆனால், லோக்நாத் பெகராவுக்கும் அனிதாவுக்கும் இடையிலேயே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறார் மோன்சன். இந்த நிலையில்தான் மோன்சனால் பாதிக்கப்பட்ட அனூப் அஹமது உள்ளிட்ட சிலர், அனிதாவிடம் சென்று முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்வரிடம் புகார் அளிக்கும்படி அனிதா ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் சென்ற பிறகே, க்ரைம் பிராஞ்ச் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

மோன்சனின் மோசடி லீலைகள்!

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கார்!

தன்னைப் பெரிய கோடீஸ்வரனாகக் காட்டிக்கொள்ள மிகவும் விலையுயர்ந்த பழைய கார்களை விலைக்கு வாங்கி, தனது காம்பவுண்டுக்குள் சும்மா நிறுத்திவைத்திருக்கிறார் மோன்சன். அவர் எங்கு போக வேண்டுமானாலும், அமெரிக்க கம்பெனியின் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டோட்ஜ் (Dodge) காரில்தான் பயணிப்பார். அந்த காரில் பணம் எண்ணும் மெஷினை எப்போதும் வைத்திருப்பாராம். மற்றொரு விலையுயர்ந்த காரை அவரின் செயின்ட் பெர்னார்டு இன நாயை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். தன் வீட்டுக்கு வரும் நபர்களை ஆச்சர்யப்படுத்தி ஏமாற்றவே இந்த ஏற்பாடாம்.

ஓராண்டுக்கு முன்பு வல்சம் குரூப் நிறுவனங்களுக்குக் கார்களை வாடகைக்கு விடுவதற்காக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகக் கூறி பொதுமக்களிடம் 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக மோன்சன் மீது புகார் அளிக்கப்பட்டது. அப்போது சேர்த்தலா போலீஸார் விசாரணை நடத்தி மோன்சனின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 20 கார்களை பறிமுதல் செய்தார்கள். அவை இன்றும் சேர்த்தலா காவல் நிலையத்தில் உள்ளன. இப்போது மோன்சனின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்ததால், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் குறித்தும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் பெயரில் 2007-ம் ஆண்டு மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ள போர்ஷே போக்ஸ்டர் (Porsche Boxster) காரும் மோன்சனின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இப்போதும் பெயர் மாற்றப்படாமல் கரீனா கபூரின் பெயரில்தான் அந்த கார் இருக்கிறது என்கிறார்கள் போலீஸார். தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிலர் மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில் தமிழ், மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் மோன்சனின் மோசடி வலையில் வீழ்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோன்சன் மாவுங்கல்லிடம் நடந்துவரும் விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப்போகின்றனவோ?!