Published:Updated:

ஊராட்சிமன்றத் தலைவரின் உத்தரவு... 30-க்கும் மேற்பட்ட நாய்கள் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!

நாய்கள் அடித்துக் கொலை

சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு கும்பல் நாய்களை சுருக்குக்கம்பியைப் பயன்படுத்தி, கட்டையால் தலையில் அடித்து கொன்று வந்திருக்கிறது.

ஊராட்சிமன்றத் தலைவரின் உத்தரவு... 30-க்கும் மேற்பட்ட நாய்கள் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!

சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு கும்பல் நாய்களை சுருக்குக்கம்பியைப் பயன்படுத்தி, கட்டையால் தலையில் அடித்து கொன்று வந்திருக்கிறது.

Published:Updated:
நாய்கள் அடித்துக் கொலை

விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு கும்பல் நாய்களை சுருக்குக்கம்பியைப் பயன்படுத்தி, கட்டையால் தலையில் அடித்து கொன்று வந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ புளூகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. எனவே சுனிதா தனக்குக் கிடைத்த வீடியோ ஆதாரத்தைக்கொண்டு, சங்கரலிங்கபுரம் ஊராட்சித் தலைவர் நாகலட்சுமி, அவருடைய கணவர் மீனாட்சி சுந்தரம், மேலும் சிலர் சேர்ந்து அந்தப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நாய்களை அடித்துக் கொலைசெய்திருப்பதாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார்‌ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில், சங்கரலிங்கபுரம் ஊராட்சிப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நாய்களை ஊராட்சிமன்றத் தலைவர் நாகலட்சுமி, அவரின் கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் வாய்மொழி உத்தரவுக்கு இணங்க சில கூலியாட்கள், அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட நாய்களை சுருக்குக்கம்பியைப் பயன்படுத்தி பிடித்து, கட்டையால் தலையில் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

தாக்கிக் கொல்லும்  காட்சி
தாக்கிக் கொல்லும் காட்சி

இவ்வாறு ஒரு நாயை கொன்று புதைப்பதற்கு 200 முதல் 300 ரூபாய் வரை கூலி பேசியதும், கொல்லப்பட்ட நாய்களை ஊராட்சிப்பகுதிக்குட்பட்ட ஒதுக்குப்புறமான இடத்தில் குழித்தோண்டி புதைக்கவும் அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்படி கடந்த 3 நாள்களாக சங்கரலிங்கபுரம் ஊராட்சிப் பகுதியில் தெருத்தெருவாக இந்தக் கும்பல் நாய்களை வேட்டையாடியது தெரியவந்தது.

ஊராட்சி தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சங்கரலிங்கபுரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நாய்கள் கொன்றுப் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஒரே இடத்தில் 30-க்கும் மேற்பட்ட நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே நாய்களின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டன. பின்னர், அவை அனைத்தும் அங்கேயே குழித்தோண்டி மீண்டும் புதைக்கப்பட்டன. இது தொடர்பாக, ஆமத்தூர் போலீஸார், ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மீனாட்சி சுந்தரம் உட்பட 4 பேரைக் கைதுசெய்தனர்‌. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கொலை
கொலை

இது தொடர்பாக புளூகிராஸ் அமைப்பாளர்‌ சுனிதாவிடம் பேசினோம். "நாய்களை அடித்துக் கொன்றதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. போலீஸ் விசாரணையிலும் நாய்கள் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் சிறையிலடைக்கவில்லை" என்றார். சங்கரலிங்கபுரம் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசுகையில், "நான்‌ ஏற்கெனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். இது சம்பந்தமாக நான் எதும் பேச விரும்பலை" என முடித்துக்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கால்நடை மற்றும் விலங்குகள் நலத்துறை அதகாரிகள் பேசுகையில், "நாய்கள் தொல்லை அதிகரித்தாலோ அல்லது வெறிநாய் கடி இருந்தாலோ அருகில் உள்ள கால்நடைதுறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு, விலங்குகளை காயப்படுத்துவதோ அல்லது கொன்று குவிப்பதோ முறையாகாது. விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் நாய்களுக்கான வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடத்த உள்ளோம். மேலும் நாய்களை, வெறிநாய்களாக மாற்றும் காரணிகளையும் மக்கள் தவிர்க்கவேண்டும்" என்றனர்.