Published:Updated:

நள்ளிரவில் காவல்நிலையத்தை துளைத்த ஏ.கே 47 - சினிமா பாணியில் கேங்ஸ்டரை மீட்ட கும்பல்

ராம் பிரசாத்

ராஜஸ்தான் காவல்நிலையத்தைச் சுற்றி வளைத்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி லாக் அப்பில் இருந்த கைதியை அழைத்துச் சென்றுள்ளது.

Vikram
Vikram

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் விக்ரம் குஜ்ஜார் மீது ஹரியானா காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஹரியானாவை கலக்கி வந்த கேங்ஸ்டரான விக்ரம் தன் கூட்டாளிகளுடன் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். விக்ரம் மீது மட்டும் 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்தக் கும்பல் ஹரியானா போலீஸுக்குத் தண்ணிகாட்டி வந்த நிலையில் கேங்ஸ்டரான விக்ரம் தலைக்கு 5 லட்சம் நிர்ணயித்தது ஹரியானா காவல்துறை. இந்நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் காவல்துறையினரிடம் அவர் பிடிபட்டார். அல்வார் பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

arrest
arrest

இந்தத் தகவல் ஹரியானா காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. விக்ரம் வழக்கு தொடர்பான ஆவணங்களை ராஜஸ்தான் போலீஸார் கேட்டனர். விக்ரம் கைதான தகவல் அவரின் கூட்டாளிகளுக்குத் தெரியவந்தது. நள்ளிரவில் காவல்நிலையத்துக்கு முன்பு சில கார்கள் வந்து நின்றன. காரில் இருந்து இறங்கிய நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். காவலர்கள் என்ன நடப்பது என சுதாரிப்பதற்குள் காவல்நிலையத்துக்குள் புகுந்த கும்பல் லாக்-அப்பில் இருந்த விக்ரமை அழைத்துச் சென்றது. 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் காவல்நிலையத்துக்கு வந்ததாகவும் அவர்கள் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். உயர் அதிகாரிகள் காவல்நிலையத்துக்குள் இருந்தபோதே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் காவல்துறை வரலாற்றில் சிறைக்கம்பிகளை உடைத்துக்கொண்டு கைதி வெளியேறியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மற்ற காவல்நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கும்பலைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவிலும் ஹை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. அந்தக் கும்பல் தப்பிச் சென்ற வாகனத்தை பழுதான நிலையில் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில் துப்பாக்கியை காட்டி ஒரு கும்பல் ஸ்கார்ப்பியோ காரை திருடி சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

Representation image
Representation image

சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மலைப்பகுதிக்கு அருகில் வாகனம் கண்டெடுக்கப்பட்டதால் அந்தக் கும்பல் மலைகளுக்குள் சென்றிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மர்ம கும்பல் காவல் நிலையத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் காவலர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விக்ரமை ஹரியானா நீதிமன்றத்திலிருந்து விடுவித்து செல்ல அந்தக் கும்பல் இதே பாணியைக் கையாண்டது குறிப்பிடத்தக்கது.