Published:Updated:

7 மாதம் தலைமறைவு... சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த வழக்கில் சிக்கிய தாய்!

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

சிறுமியின் தாயும் சிறுமியைத் திருமணம் செய்த மாப்பிள்ளையும், ஓமலூர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்திற்கு அருகே உள்ள கே.ஆர். தோப்பூரில், 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியைத் தன் தாயே 35 வயதுடைய தன் அண்ணன் மகனுக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயும் சிறுமியைத் திருமணம் செய்த மாப்பிள்ளையும், ஓமலூர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர். தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரத்தினம். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு, 12 வயதில் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு மகள் உள்ளார். இவர், கே.ஆர். தோப்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரத்தினத்தின் சொந்த அண்ணன் மகன், செந்தில்குமார். இவருக்கு வயது 35 ஆகிறது.

திருமணம்
திருமணம்

ரத்தினம், தன் கணவரின் பேச்சையும் கேட்காமல், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 12 வயதுடைய தன் மகளை 35 வயதுடைய தன் அண்ணன் மகன் செந்தில்குமாருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்தார். இத்திருமணத்திற்கு, செந்தில்குமாரின் உறவினர்களான பாபு, திருமுருகன், கமலா, மணிமேகலை, மஞ்சு ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இத்திருமணத்தால் கோபம் அடைந்த சிறுமியின் தந்தை பால்ராஜ், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியை மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் இந்தத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ரத்தினம் ஆகிய இருவரையும் ஓமலூர் போலீஸார் இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்தனர்.

அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பாபு, திருமுருகன், கமலா, மணிமேகலை, மஞ்சு, மதி ஆகியோரைத் தேடிவருகின்றனர்.''

இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, ''சிறுமியின் தந்தை பால்ராஜ் 7 மாதத்திற்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிறுமையை மீட்டதோடு, திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களைக் கைதுசெய்யச் சென்றோம். அனைவரும் தலைமறைவாகிவிட்டார்கள். தொடர்ந்து தேடிவந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு